கன்னையா குமார் மீதான தேச துரோக வழக்குத் தொடுப்பதற்கு டெல்லி போலீஸ் சிறப்புப் பிரிவுக்கு அம்மாநில அரசு ஒப்புதலளித்துள்ளது. இதற்காக டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் ‘எவ்வளவுக்கு விலைபோனீர்கள்’ என விமர்சித்துள்ளார்.
டெல்லி ஜவர்ஹர்லால் பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார், உமர் காலித், அனிர்பன் உள்ளிட்ட மாணவர்கள் மீது தேச துரோக வழக்கைத் தொடர்வதற்கு டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவுக்கு அம்மாநில அரசு ஒப்புதல் தந்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு ஃபிப்ரவரி 9-ம் தேதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் தேச விரோத முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக கன்னையா குமார் 10 மாணவர்கள் மீது தேச துரோக வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கின் குற்றப்பத்திரிகை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது.
டெல்லி அரசிடம் முறையான ஒப்புதல் பெற்ற பின்னரே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், தற்போது டெல்லி அரசு ஒப்புதல் தந்துள்ளது.
டெல்லி அரசு கொடுத்த இந்த ஒப்புதலை, தான் உறுதியாக மறுப்பதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். அத்தோடு, தேச துரோகச் சட்டம் குறித்த புரிதலில் மத்திய அரசுக்கு சற்றும் சளைக்காததாக டெல்லி அரசு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கன்னையா குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், ”இந்த விஷயம் உருவாக்கப்பட்டதற்கும் தாமதிக்கப்பட்டதற்கும் அரசியல் காரணங்கள் இருப்பது தெளிவு. விரைவு நீதிமன்ற வேகமாக விசாரணை நடத்தவேண்டும். அப்போதுதான், தேச துரோகச் சட்டம் எவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்பதை ஒட்டுமொத்த நாடும் தெரிந்துகொள்ளட்டும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சித்துள்ள பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப், ”நீங்கள் எவ்வளவுக்கு விலை போனீர்கள்” எனக் கேட்டுள்ளார்.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.