ஆண் நண்பருடன் மொபைலில் பேசிக்கொண்டிருந்த போது பெற்றோரிடம் வசமாக மாட்டிக் கொண்ட சிறுமி, வீட்டில் இருந்து திரைப்பட பாணியில் தப்பிக்க நினைத்து அடுக்குமாடி குடியிருப்பில் ஜன்னல் வழியாக இறங்கிய போது 6வது மாடியிலிருந்து தடுமாறி விழுந்ததில் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகரான மும்பையின் வெர்சோவா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தான் இந்த படுபயங்கர சம்பவம் நடந்துள்ளது. 16 வயதாகும் அந்த சிறுமி நேற்று (டிசம்பர் 21) காலை தனது வீட்டில் இருந்தவாறு ஆண் நண்பருடன் மொபைலில் பேசிக் கொண்டிருந்த போது, சிறுமியின் பெற்றோரிடம் கையும் களவுமாக சிக்கிக் கொண்டார்.
இதனையடுத்து அவர் வீட்டில் உள்ள தனது அறையில் சென்று கதவை தாழிட்டுக்கொண்டார். பெற்றோரிடம் மாட்டிக்கொண்டதால் தனக்கு என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் இருந்த சிறுமி வீட்டை விட்டு வெளியேறுவது என முடிவெடுத்து ஒரு பையில் தனது ஆடைகளை எடுத்து பேக் செய்து கொண்டார். ஆனால் வாசல் வழியாக தப்பிக்க முடியாது என்பதால் 6வது மாடியில் உள்ள தனது அறையில் இருக்கும் ஜன்னல் வழியாக கீழே இறங்குவது என திரைப்படங்களில் வருவதை போல திட்டமிட்டார்.
இதையும் படிங்க: 12 குடும்ப ஓட்டுகள் இருந்தும் ஒரு ஓட்டு மட்டுமே பெற்ற வேட்பாளர் - வாக்கு எண்ணும் மையத்தில் கதறி அழுதார்...
தனது தாயின் சேலைகளை ஒவ்வொன்றாக முடிச்சு போட்டு கயிறு போல மாற்றி, அதன் ஒரு முனையை அறையில் இருந்த ஏசி மெஷினில் கட்டினார். பின்னர் தனது பையை எடுத்துக் கொண்டு, 6வது மாடியில் உள்ள தனது வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே வந்து சேலையை பிடித்துக் கொண்டு கீழே இறங்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சேலையில் இருந்த சிறுமியின் பிடி நழுவியதால் 6வது மாடியில் இருந்து சிறுமி கீழே விழுந்தார்.
இதையும் படிங்க: ஆதார் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பின் நன்மைகள் - ஒரு பார்வை
கீழே விழுந்து படுகாயமடைந்த சிறுமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமிக்கு முதுகுத் தண்டுவடத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரின் உடல்நிலை தேறிய பின்னர், நடந்த சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.