நீண்ட இடைவேளைக்கு பிறகு சுமார் 11 மாநிலங்களில் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு! 

நீண்ட இடைவேளைக்கு பிறகு சுமார் 11 மாநிலங்களில் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு! 

பள்ளி மாணவிகள்

தற்போது கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. மேலும், கொரோனா தடுப்பூசியும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுவதுமாக தளர்த்தியுள்ளன.

  • Share this:
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. மேலும், அந்த ஆண்டுக்கான பள்ளி, கல்லூரி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்த நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. மேலும், கொரோனா தடுப்பூசியும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுவதுமாக தளர்த்தியுள்ளன.

அரசுகளும் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்புகளை வெளியிட்டு வந்தன. அந்த வகையில், ஆந்திரா, குஜராத், ஹரியானா, கர்நாடகா, ஜம்மு-காஷ்மீர், மேகாலயா மற்றும் தெலுங்கானா என கிட்டத்தட்ட 11 மாநிலங்களில் உள்ள பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. இந்த மாநிலங்களில் பெரும்பாலானவை 2021-ம் ஆண்டு பொதுதேர்வுகளில் பங்கேற்கும் உயர்நிலை மாணவர்களுக்காக ஏற்கனவே பள்ளிகளை திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. டெல்லி பல்கலைக்கழகமும் (DU) இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை இன்று முதல் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

பள்ளிக்கு வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கொரோனா தொடர்பான அனைத்து  பாதுகாப்பு நடவடிக்கைகளும் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என கல்வி நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைகளை சரியான முறையில் ஏற்பாடு செய்வதும், வகுப்பறைகளில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையேயான தனிமனித இடைவெளியைப் பராமரிப்பதும் காட்டாயம் என அரசு வலியுறுத்தியுள்ளது. முகக்கவசங்கள், சானிடைசர்கள், அடிக்கடி கை கழுவுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அந்தந்த மாநில அரசுகள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளன.  

அதன்படி இன்று எந்தெந்த மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன என்பதை காணலாம்.

ஆந்திரா: ஆந்திர மாநிலத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான தொடக்க பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் தொடக்கப் பள்ளிகள் முழு நாளும் இயங்கும் என்றும் அம்மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பான வழிகாட்டுதல்களையும் ஆந்திர மாநில கல்வித் துறை வெளியிட்டுள்ளது. மேலும் மாணவர்களின் வருகை கட்டாயமாக்கப்படவில்லை. ஆனால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் தங்கள் பெற்றோரின்  எழுத்துப்பூர்வ ஒப்புதலுடன் மட்டுமே பள்ளிகளில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

டெல்லி பல்கலைக்கழகம்: டெல்லி பல்கலைக்கழகம் (DU) இறுதி ஆண்டு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இறுதி ஆண்டு மாணவர்கள் தங்கள் கல்லூரிகள், மையங்கள் மற்றும் துறைகளில் தங்கள் ஆய்வகம், நூலகம் மற்றும் பிற தொடர்புடைய செயல்பாடுகளில் சிறிய அளவில் கலந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், பல்கலைக்கழகம் இன்று முதல் 100 சதவீத ஊழியர்களின் பலத்துடன் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்: குஜராத்தில் 9ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

ஹரியானா: ஹரியானாவில் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் வகுப்புகள் காலை 10 மணி முதல் மதியம் 1:30 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோரின் எழுத்துப்பூர்வ ஒப்புதலுடன், 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்குள் நுழையலாம். மேலும் அவர்கள் ஏதேனும் ஒரு சுகாதார மையத்திலிருந்தோ அல்லது மருத்துவரிடமிருந்தோ சுகாதார சான்றிதழை  பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேசம்: 5ம் வகுப்பு மற்றும் 8 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதேபோல தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள், பாலிடெக்னிக்ஸ் மற்றும் பொறியியல் கல்லூரிகளும் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன.

கர்நாடகா: கர்நாடகாவும், 9 ஆம் வகுப்பு மற்றும் முதலாம் ஆண்டு ப்ரீ-யூனிவர்சிட்டி வகுப்புகளுக்கான மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகள் இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

ஜம்மு-காஷ்மீர்: 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜம்மு பிராந்தியத்தின் கோடை மண்டலத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும், காஷ்மீர் பிரிவு மற்றும் ஜம்மு பிரிவின் குளிர் மண்டல பகுதிகளில் உயர்கல்வி நிறுவனங்கள் பிப்ரவரி 15 முதல் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேகாலயா: மேகாலயாவில் உயர்கல்வி மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதேபோல் மேகாலயாவில் உள்ள கல்லூரிகள் பாடம் பரிவர்த்தனைகள், அசைன்மென்ட், ஆன்-லைன் இன்டெராக்சன் மற்றும் ஆலோசனைகளுக்காக மட்டும் திறக்கப்படும் என தெரிவித்துள்ளது.

ஒடிசா: ஒடிசா அரசு அங்கன்வாடி மையங்களை இன்று முதல் மீண்டும் திறந்துள்ளன. ஒடிசா அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறக்கும் முடிவு மாநிலத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்புகளை பரிசீலித்த பின்னர் எடுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப்: பஞ்சாப்பில் இன்று முதல் அனைத்து அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளிலும் அங்கன்வாடி மற்றும் ப்ரீகேஜி வகுப்புகளை திறந்துள்ளது. அங்கன்வாடி மையங்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை செயல்படும். மற்றும் ப்ரீகேஜி வகுப்புகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா: தெலுங்கானாவில் இன்று முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிகளையும் மற்றும் அனைத்து கல்லூரிகளையும் மீண்டும் திறந்துள்ளது. மாநிலத்தின் மற்ற அனைத்து மாவட்டங்களிலும் காலை 9:30 மணி முதல் மாலை 4:45 மணி வரை பள்ளிகள் செயல்படும் என்றும் ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத்தில் காலை 8:45 மணி முதல் மாலை 4 மணி வரை பள்ளிகள் செயல்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் வகுப்புகள் காலை 10 மணி முதல் 11 மணி வரையும், 9 ஆம் வகுப்புக்கு மாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நடைபெறும் என்றும் மாநில அரசாங்கம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Published by:Ram Sankar
First published: