விளையாட்டில் சாதித்துவிட்டு வருகிறோம் எங்களை தேடாதீர்கள் என பத்தாம் வகுப்பு மாணவர்கள் மூவர் கடிதம் எழுதிவைத்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த 10 வகுப்பு மாணவர்கள் பரிக்ஷ்த், நந்தன் மற்றும் கிரண் மூவர் நண்பர்கள். கடந்த சனிக்கிழமை மாணவர்கள் மூவரும் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர். நீண்ட நேரமாகியும் மாணவர்கள் கிடைக்காததால் அவர்களது பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். மாணவர்களின் வீட்டில் நடத்திய சோதனையில் 2 பேரின் வீட்டில் போலீஸார் கடிதத்தை கண்டனர். அதில் மாணவர்கள் தங்களை தேட வேண்டாம் என பெற்றோருக்கு கைப்பட கடிதம் எழுதியுள்ளனர்.
மாணவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், “ எங்களுக்கு படிப்பை விட விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உள்ளது. ஆனால் நீங்கள் எங்களை படி படி என கட்டாயப்படுத்துகிறீர்கள். எங்களுக்கு படிப்பை தொடர்வதில் ஆர்வம் இல்லை. எங்களின் கவனம் முழுவதும் விளையாட்டில் உள்ளது. நாங்கள் விளையாட்டு துறையில் எங்களது வாழ்க்கையை கட்டமைத்துக் கொள்கிறோம். எங்களுக்கு கபடி என்றால் மிகவும் பிடிக்கும். இந்த துறையில் சாதிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.இதில் சாதித்து பெரிய ஆளாக வந்து வீட்டுக்கு வருகிறோம்’ என அதில் எழுதப்பட்டுள்ளது.
மேலும் அந்த கடிதத்தில் தங்களை தேட வேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ளார். மாணவர்களின் கடிதத்தை கைப்பற்றிய போலீஸார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உறவினர்கள் நண்பர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் மாணவர்களின் வீடு அமைந்துள்ள பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் உள்ள காட்சிகளை கொண்டு மாணவர்களை தேடிவருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags: Bengaluru, News On Instagram, Police, School students