ஹரியானா ஜஜ்ஜரின் ஜவஹர் நவோதயா வித்யாலயாவில் 8-ம் வகுப்பு படிக்கும் கார்த்திகேய ஜாகர் என்ற மாணவர் எந்த வழிகாட்டுதலும் இல்லாமல் மூன்று கற்றல் செயலிகளை உருவாக்கி கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
12 வயது சிறுவன் கார்த்திகேயாவுக்கு விவசாயியான தனது தந்தை அஜித் சிங், கொரோனா பொதுமுடக்கத்தின் போது ஆன்லைன் வகுப்புகளுக்காக சுமார் ரூ. 10 ஆயிரம் செலவில் மொபைல் ஃபோன் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார்.
‘யூடியூப் உதவியுடன் ஃபோனை வைத்து எனது படிப்பை தொடர்ந்தேன். பின்பு மூன்று செயலிகளை உருவாக்கினேன்- முதல் செயலி லூசண்ட் ஜி.கே. ஆன்லைனில் பொது அறிவு தொடர்பானது. இரண்டாவது செயலி ராம் கார்த்திக் கற்றல் மையம் ஆகும், இது கோடிங் மற்றும் கிராஃபிக் டிசைனிங் தொடர்பானது. மூன்றாவது செயலி ஸ்ரீ ராம் கார்த்திக் டிஜிட்டல் கல்வி ஆகும். தற்போது, இந்த செயலிகள் 45,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச பயிற்சியை வழங்குகின்றன’ என்று அந்த மாணவன் கூறினார்.
8-ம் வகுப்பு மாணவன் ஜாகர் இவ்வளவு இளம் வயதிலேயே பல மதிப்புமிக்க விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கார்த்திக், ஹார்வர்ட் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு உதவித்தொகை பெற்று, பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார்.
சிறுவனின் தந்தை அஜித் கூறுகையில், ‘என் மகனுக்கு இன்னும் பல பயனுள்ள செயலிகளை உருவாக்க உதவுமாறு நான் அரசை கேட்டுக்கொள்கிறேன். என் மகன் ஒரு திறமைசாலி, அவர் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்று கூறினார். இந்நிலையில், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஜஜ்ஜரைச் சேர்ந்த 12 வயது கார்த்திகேயா, இளைய ஆப் டெவலப்பராக உலக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். விளையாட்டு, கலாச்சாரத்திற்கு பிறகு, ஹரியானா இளைஞர்கள் உலக அளவில் தொழில்நுட்பத்திலும் பிரகாசிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று முதல்வர் குறிப்பிட்டார்.
ஜஜ்ஜார் துணை கமிஷனர் கேப்டன் சக்தி சிங், தேவைப்பட்டால், இந்த சிறுவனுக்கு போதுமான உதவியை வழங்குவோம். மற்ற மாணவர்களும் அவருடன் உரையாட ஏற்பாடு செய்கிறோம். இதனால் மற்ற குழந்தைகளும் உந்துதலைப் பெறுவார்கள் என்று கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Guinness, Haryana, School student