நாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கு தடைவிதிக்கப்படுமா? - உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு

நாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கு தடைவிதிக்கப்படுமா? - உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: October 23, 2018, 8:13 AM IST
  • Share this:
நாடு முழுவதும் பட்டாசுகள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடைவிதிப்பது குறித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

பட்டாசுகளை வெடிப்பதால், சுற்றுச்சூழல் மாசடைவதாகக் கூறி, உச்சநீதிமன்றத்தில் கடந்த 2015-ம் ஆண்டில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நாடு தழுவிய அளவில் பட்டாசுகள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு, தலைநகர் டெல்லியில் கடந்த ஆண்டில் தீபாவளிப் பண்டிகையின்போது பட்டாசு விற்பனைக்கு தடைவிதித்தது.

இதன்மூலம், காற்று மாசு அளவு 30 விழுக்காடு அளவுக்கு குறைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் நாடு தழுவிய அளவில் பட்டாசு விற்பனைக்கு தடைவிதிக்கக் கூடாது என்று பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதேபோல, முற்றிலும் தடைவிதிக்க எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு, சில கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என கருத்து தெரிவித்தது. இதையடுத்து, நாட்டு மக்களின் நலனையும் பட்டாசு உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தையும் கவனத்தில் கொள்வோம் என்று நீதிபதிகள் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி தெரிவித்தனர்.


இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது. நாட்டில் உற்பத்தியாகும் பட்டாசுகளில் 90 விழுக்காடு அளவுக்கு சிவகாசியில் உற்பத்தியாகிறது. இங்குள்ள ஆயிரத்து 750-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூலம், 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். மேலும், 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான தீபாவளிப் பண்டிகை, வரும் 6-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று வழங்கப்படும் தீர்ப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
First published: October 23, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்