ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் சேமிக்க உலக தண்ணீர் தினத்தில் உறுதியேற்க மக்களைப் பிரதமர் நரேந்திர
மோடி வலியுறுத்தியுள்ளார். தண்ணீரை சேமிப்பதற்காக பணியாற்றும் அனைத்து தனிநபர்களையும், அமைப்புகளையும் அவர் பாராட்டியுள்ளார்.
தண்ணீரின் முக்கியத்துவம் கருதி கடந்த 1992-ம் ஆண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்த சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக்கான ஐநா மாநாட்டில் மார்ச் 22-ம் தேதி உலக தண்ணீர் தினமாக கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து கடந்த 1993-ம் ஆண்டு முதல் மார்ச் 22-ந்தேதி ஒவ்வொரு ஆண்டும் உலக தண்ணீர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி தண்ணீரை பாதுகாப்பது, உற்பத்தியை பெருக்குவது, சேமிப்பது உள்ளிட்டவை தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன.
இதையும் படிங்க - 'லஞ்சம், பரிந்துரை இல்லாமல் 25 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்' : பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு
இன்று உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது-
கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் புதிய கண்டுபிடிப்பு முயற்சிகளுடன் தண்ணீர் சேமிப்பு மக்கள் இயக்கமாக மாறியிருப்பதைக் காண்பதற்கு மனம் நெகிழ்கிறது. தண்ணீரை சேமிப்பதற்காக பணியாற்றும் அனைத்து தனிநபர்களையும், அமைப்புகளையும் நான் பாராட்ட விரும்புகிறேன்.
இதையும் படிங்க - பெற்றோர் சொத்தில் பிள்ளைகள் உரிமை கோர முடியாது: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் சேமிக்க உலக தண்ணீர் தினத்தில் நாம் உறுதியேற்போம். தண்ணீர் சேமிப்பை உறுதி செய்யவும் நமது குடிமக்களுக்குத் தூய்மையான குடிநீர் கிடைக்கவும் ஜல் ஜீவன் இயக்கம் போன்ற எண்ணற்ற நடவடிக்கைகளை நமது நாடு மேற்கொண்டுள்ளது.
ஜல் ஜீவன் இயக்கம் தாய்மார்களின், சகோதரிகளின் வாழ்க்கையை எளிதாக்க மிகச் சிறந்தப் பணியை செய்கிறது. மக்களின் பங்கேற்புடன் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்குவது என்ற உறுதிமொழி நிறைவேற்றப்படும்.
அனைவரும் ஒருங்கிணைந்து தண்ணீர் சேமிப்பை அதிகரித்து பூமியின் ஆயுள் நீட்டிப்புக்கு பங்களிப்பு செய்வோம். சேமிக்கப்பட்ட ஒவ்வொரு சொட்டு தண்ணீரும் நமது மக்களுக்கு உதவுகிறது. நமது முன்னேற்றத்தை அதிகரிக்கிறது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.