ஜெயலலிதா பயன்படுத்திய காரில் பயணம்... ஆரம்பமே அதிரடி கொடுத்த சசிகலா

ஜெயலலிதா பயன்படுத்திய காரில் பயணம்... ஆரம்பமே அதிரடி கொடுத்த சசிகலா

சசிகலா பயணித்த கார்

சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும் அவரை வீட்டில் சில நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு மருத்துவர்கள் அறுவுறித்துள்ளனர்.

 • Share this:
  விக்டோரியா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வெளியே வந்த சசிகலா ஜெயலலிதா பயன்படுத்திய காரில் பயணம் மேற்கொண்டு ஆரம்பத்திலேயே அதிரடி கொடுத்துள்ளார்.

  சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து கடந்த 27-ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலையான சசிகலாவுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக அவருக்கு அறிகுறி ஏதும் இல்லாததால் மருத்துவமனையிலிருந்து இன்று மதியம் 12 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

  சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும் அவரை வீட்டில் சில நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு மருத்துவர்கள் அறுவுறித்துள்ளனர். இதனால் சில நாட்கள் அவர் பெங்களூரில் தங்கி இருந்த பின்பே சென்னை திரும்ப உள்ளார். விக்டோரியா மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன சசிகலாவிற்கு மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

  சசிகலா பெங்களூருவில் பயணம் செய்த கார் இதற்கு முன் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது பயன்படுத்திய கார் என்பது குறிப்பிடதக்கது. மேலும் காரின் முன் அதிமுக கொடி பறக்கவிடப்பட்டிருந்தது. இதன் மூலம் அதிமுக-வை சசிகலா மீண்டும் தன் கட்டுக்குள் கொண்டு வருவார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

  அமமுக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சசிகலா காரில் அதிமுக கொடி இடம்பெற்றது குறித்து கூறுகையில், “சசிகலாதான் அதிமுகவின் பொதுச்செயலாளர். அதிமுக கொடியை பயன்படுத்தும் அத்தனை அதிகாரமும் சசிகலாவிற்கு உள்ளது. செயற்குழு பொதுக்குழு கூட்டும் அதிகாரம் சசிகலாவிற்குதான் உள்ளது. அவர் பயன்படுத்திய கார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய கார்.

  7 நாள் ஓய்விற்கு பிறகு சென்னை திரும்புவார். அமமுக தொடங்கியது அதிமுகவை மீட்டெடுக்கத்தான். அதிமுக-வை மீட்டெடுக்கும் நடவடிக்கை தொடரும். சசிகலா தமிழகம் வந்த பின்னர் அதிமுகவை மீட்டெடுக்கும் சட்டப்போராட்டம் தொடரும்” என்றார்.
  Published by:Vijay R
  First published: