• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • அதிகரிக்கும் கொரோனா : குவியும் சடலங்களை குப்பை வண்டியில் எடுத்துச் செல்லும் அவலம்

அதிகரிக்கும் கொரோனா : குவியும் சடலங்களை குப்பை வண்டியில் எடுத்துச் செல்லும் அவலம்

சடலங்களை குப்பை வண்டியில் எடுத்துச் செல்லும் அவலம்

சடலங்களை குப்பை வண்டியில் எடுத்துச் செல்லும் அவலம்

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்னந்த்கான் பகுதியில் உயிரிழந்தவர்களின் சடலங்களை மயானம் வரை குப்பை அள்ளும் வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Share this:
    நாட்டில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று பாதிப்பின் அளவு இரண்டு லட்சமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக மத்திய அரசு ஏப்ரல் 11 முதல் 14-ம் தேதி வரை தடுப்பூசி திருவிழாவை நடத்தியது.

    எனினும், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமலும், தேவையான வசதிகள் இல்லாமலும் பல்வேறு மாநிலங்கள் திணறுகின்றன. படுக்கை வசதிகள், வென்டிலேட்டர்கள், ஆக்ஸிஜன், தடுப்பூசி இல்லாமல் பல மாநிலங்கள் தடுமாறி வருகின்றன. மத்திய அரசின் தொகுப்பில் இருக்கும் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் எனப் பல மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் கொரோனா நோயாளிகளின் சடலங்கள் குப்பை அள்ளும் வாகனத்தில் எடுத்துச் செல்லப்படும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளிவந்துள்ளன. இதுதொடர்பாக வெளியாகியுள்ள காட்சிகளில், பிபிஇ பாதுகாப்பு உடைகள் அணிந்துள்ள மாநகராட்சி ஊழியர்கள், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை மயானம் வரை குப்பை அள்ளும் வாகனங்களில் எடுத்துச் செல்கின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து தலைமை சுகாதார அதிகாரியிடம் விசாரித்த போது, உயிரிழந்தவர்களின் சடலங்களை எடுத்துச் செல்ல வாகனங்கள் ஏற்பாடு செய்வது நகரப் பஞ்சாயத்தின் பொறுப்பாகும். தொடர்ந்து அவர்களிடம் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துளார்.

    கொரோனா இரண்டாவது அலை தொடங்கியதில் இருந்து, சத்தீஸ்கர் மாநிலம் தொற்று நோய்களுக்கான மையமாக மாறியுள்ளது, மேலும் அதிகரித்து வரும் உயிரிழப்புகள் சுகாதார உள்கட்டமைப்பு நெருக்கடியை வெளிப்படுத்தியுள்ளன. நேற்று மட்டும் சத்தீஸ்கரில் புதிதாக 14,250 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,86,244 ஆக அதிகரித்துள்ளது. தினசரி 120 பேர் வரை உயிரிழந்து வருகின்றனர். இதனால் அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையும் 5,307ஆக உயர்ந்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: