-அனில் பலுனி, மாநிலங்களவை எம்.பி.
இந்தியாவின் பழமையான நகரம் என்று சொல்லப்படும் வாரணாசியில் வடக்கு மற்றும் தெற்கு மக்களை இணைப்பதற்கான புதிய முயற்சியாக “காசி-தமிழ் சங்கமம்” கடந்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கப்பட்டது. 1 மாதம் நடந்த இந்த நிகழ்வு நாளை 16 டிசம்பர் நிறைவடைகிறது. இந்த நிகழ்வின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காலத்தால் அழியாத இரு கலாச்சாரங்களின் சங்கமம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆன்மீகம், கலாச்சாரம் மற்றும் வரலாற்று ரீதியாக இந்தியாவின் தெற்கு பகுதியையும் வடக்கையும் ஒன்றிணைப்பது பிரதமர் நரேந்திர மோடியின் முக்கிய பணிகளில் ஒன்று. காசி, இந்தியாவின் கலாச்சார தலைநகரம். அதேசமயம் தமிழ்நாடு மற்றும் தமிழ் கலாச்சாரம் இந்தியாவின் தொன்மை மற்றும் பெருமையின் மையம். இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்தது.
அவற்றை ஒருங்கே பாதுகாப்பது நம் கடமை . வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய மக்களை ஒருங்கிணைக்கும் நிகழ்வாக இந்த சங்கமத்தை நரேந்திர மோடி அவர்கள் நடத்தியுள்ளார். ஹிந்தி பேசும் மக்களையும் தமிழ் பேசும் மக்களையும் இணைக்கும் பாலமாக இது அமையும் என்று மோடி நம்பினார். அந்த குறிக்கோளை தற்போது நிறைவேற்றியும் காட்டியுள்ளார் .
வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்தவும், இரு மையங்களின் கலாச்சாரம் மற்றும் மரபுகளின் ஒற்றுமையைப் பற்றி மக்களுக்குத் தெரியப்படுத்தவும், சிறந்த இந்திய மரபுகள், கலைகள், கலாச்சாரம் மற்றும் மதங்களை பற்றி இளைய தலைமுறைக்கு கற்றுக்கொடுக்கும் முயற்சியாக இந்த சங்கமம் அமைந்தது.
இந்தியர்கள் காலையில் எழுந்ததும் காசி தொடங்கி ராமேஸ்வரம் வரை 12 லிங்க ஸ்தலங்களை பற்றி நினைவு கூறுவது வழக்கம். இன்று காசி ஆன்மீகம் மற்றும் கலாச்சாரத்தின் உலகளாவிய மையமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழ்நாட்டில் தட்சிண காசியும் உள்ளது. இந்து மதத்தின் ஏழு புனித யாத்திரைத் தலங்கள் எனப்படும் 'சப்த புரிகளில்' காசி-காஞ்சி ஈடற்ற முக்கியத்துவம் பெற்று இருப்பதாக பிரதமர் மோடி கூறும்போது, காசியில் உள்ள பாபா விஸ்வநாத் தாமில் இருந்து ராமேஸ்வரம் வரை ஒரு பயணமாக நம்மை அழைத்துச் செல்கிறார்.
காசி மீதான இந்த நித்திய காதல் தமிழ் நெஞ்சங்களில் உள்ளது. இது கடந்த காலத்தில் என்றும் மறையாது. எதிர்காலத்திலும் மங்காது என்று மோடி ஆழமாக நம்புகிறார். ஒருமுறை மோடி அவர்கள் பேசும் போது காசி துளசிதாசர் பூமி என்றால் தமிழ்நாடு திருவள்ளுவர் பூமி என்று குறிப்பிட்டார். சுதந்திரம் அடைந்து அமிர்த காலத்தை கொண்டாடும் வேளையில் நம் பரந்துபட்ட கலாசார நிலைகளோடு தொன்மையான தமிழை உலகறிய செய்யும் பணியை மோடி சிரத்தே மேற்கொண்டு செய்து வருகிறார்.
அதோடு மோடி தமிழ் மொழியை பல முக்கிய இடங்களில் பயன்படுத்துவத்தை நீங்கள் காணலாம். பல்வேறு முக்கிய உள்நாட்டு மற்றும் உலகளாவிய தளங்களில் அவர் ஆற்றிய உரைகளின் போது, தமிழ் கலாச்சாரம், மரபுகள் மற்றும் இலக்கியத்தின் மகத்துவம் மற்றும் பங்களிப்புகள் பற்றி விரிவாகப் பேசியுள்ளார்.இந்த ஆண்டு ஜனவரியில், செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தை பிரதமர் திறந்து வைத்தார்.
அதே நேரத்தில் காசியில் நீண்ட காலம் வாழ்ந்த பாரதி நினைவாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் “சுப்பிரமணிய பாரதி இருக்கை” நிறுவப்பட்டுள்ளது. திருக்குறள் படிக்க வேண்டும் என்று இளைஞர்களுக்கு திரும்பத் திரும்ப மோடி நினைவூட்டுகிறார். அதோடு சில ஆண்டுகளுக்கு முன்பு, திருக்குறளின் குஜராத்தி பதிப்பை மோடி வெளியிட்டார்.
2019-ம் ஆண்டு ஐநா பொதுச் சபையின் 74-வது அமர்வில் பிரதமர் மோடி உரையாற்றிய போது, சங்ககாலத் தமிழ் புலவர் கணியன் பூங்குன்றனார் தமிழில் எழுதிய"யாதும் ஊரே, யாவரும் கேளீர்" என்பதை மேற்கோள் காட்டி பேசினார்". இவ்வாறு தமிழுக்கான மரியாதையும் அதன் சிறப்புகளையும் உலகறிய செய்யும் பணியை மோடி செய்து வருகிறார்.
அடுத்த தமிழ்சங்கமம் குஜராத்தில் நடக்க இருக்கிறது. அதற்கு காரணம், குஜராத்தின் கட்ச் பகுதியில் இருந்து வெளிநாட்டவர் படையெடுப்பால் தமிழகத்தின் மதுரை மற்றும் பிற பகுதிகளுக்கு குடியேறிய சௌராஷ்ட்ரியர்கள் இன்றும் அங்கு வாழ்ந்து வருகின்றனர். இந்த பந்தத்தை போற்றி கொண்டாடுவதே எங்களது எண்ணம்.
சமூகத்தில் விரிசல்களை உருவாக்கி, இந்திய எதிர்ப்பு சக்திகளுக்கு பக்கபலமாக இருந்து, தங்கள் அற்ப அரசியல் லாபங்களுக்காக பிரித்தாளும் பல அரசியல்வாதிகளுக்கு நடுவில் கலாச்சாரங்களை ஒன்றிணைக்கும் நிகழ்வாக காசி - தமிழ் சங்கமத்தை மோடி நடத்திக் காட்டி இந்தியர்களின் காலாச்சார பந்தத்தை மேம்படுத்தியுள்ளார். இந்த சங்கமம் நாம் நமது கடமைகளை உணர்ந்து, தேசிய ஒற்றுமையை வலுப்படுத்த ஆற்றலை அளிக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, Narendra Modi, Varanasi