தேசவிரோத செயல்: இன்போசிஸ் நிறுவனம் மீது ஆர்.எஸ்.எஸ் ஊடகம் பகீர் குற்றச்சாட்டு!

infosys

இன்போசிஸ் நிறுவனம் தனது வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு இதே போல தரம் குறைந்த சேவையை வழங்குமா?

  • Share this:
ஐடி மற்றும் ஜிஎஸ்டி இணையதளங்களில் தொடர்ந்து கோளாறு ஏற்பட்டு வரும் நிலையில் இவற்றை உருவாக்கிய இன்போஸிஸ் நிறுவனம் மீது ஆர்.எஸ்.எஸ் சார்பு ஊடகமான ‘பாஞ்சஜன்யா’ கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருப்பதுடன் தேச விரோத சக்திகளுக்கு உதவும் வகையில் இன்போசிஸ் செயல்படுவதாக கூறியுள்ளது.

பெங்களூரில் இருந்து செயல்பட்டு வரும் ஆர்.எஸ்.எஸ் சார்பு ஊடகமான ‘பாஞ்சஜன்யா’ எனும் வாரப் பத்திரிகை, இன்போசிஸ் நிறுவனம் குறித்த கவர் ஸ்ரோரி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான இணையதளத்தில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை தீர்க்காமல், இந்தியாவின் பொருளாதாரத்தை வீழ்த்த இன்போசிஸ் திட்டமிட்டிருப்பதாகவும், நக்ஸல்கள், இடதுசாரி அமைப்பினருக்கு உதவும் வகையில் செயல்பட்டு வருவதாகவும் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.

வருமான வரி கணக்கு ரிட்டர்ன்களை பெறுவதற்கு இருந்து வந்த 63 நாட்கள் எனும் காலத்தை சுருக்கி ஒரே நாளில் ரிட்டர்ன்கள் கிடைக்கச் செய்யும் வகையில் சுலபமான ஐடி போர்டல் ஒன்றை உருவாக்குவதற்காக திட்டமிட்ட மத்திய அரசு 2019ம் ஆண்டு, அந்த பணியை பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இன்போஸிஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்தது. இந்நிலையில் http://www.incometax.gov.in என்ற புதிய ஐடி போர்டல் உருவாக்கப்பட்டு கடந்த ஜூன் 7ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.

ஆனால் இந்த போர்டலில் பல்வேறு கோளாறுகள் ஏற்பட்டதால் வரி செலுத்துவோரால் அதனை சரிவர பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதை கவனத்தில் எடுத்துக் கொண்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்போசிஸ் தலைமை செயல் அதிகாரியை சம்மன் அனுப்பி வரவழைத்து செப் 15ம் தேதிக்குள் கோளாறுகளை சரி செய்ய வேண்டுமென அறிவுறுத்தினார்.

Also Read: 600 தாலிபான்களை ஒரே நாளில் போட்டுத்தள்ளிய பஞ்ஷிர் போராளிகள்; 1000 பேர் சிறைபிடிப்பு!

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் சார்பு ஊடகமான பாஞ்சஜன்யா இன்றைய எடிஷனில் இது குறித்து விரிவான செய்தியை வெளியிட்டு அதில் இன்போசிஸ் நிறுவன செயல்பாட்டை கடுமையாக சாடியுள்ளது.

இன்போசிஸ் நிறுவனம் தனது வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு இதே போல தரம் குறைந்த சேவையை வழங்குமா? இன்போசிஸ் நிறுவனம் தொடர்ந்து இந்திய பொருளாதாரத்தை முடக்க நினைக்கிறது. இதன் மூலம் சில தேச விரோத சக்திகள் இன்போசிஸுடன் கை கோர்த்து இந்த வேலைகளில் ஈடுபடுகிறதோ என சந்தேகம் எழுகிறது. பல கோடி வரி செலுத்தும் மக்களுக்கு இடர்பாடு ஏற்பட்டுள்ளது. சில போலி செய்தி வெளியிடும் இணையதளங்களுக்கு இன்போசிஸ் நிதி உதவி வழங்கியிருக்கிறது. எனவே இந்த குற்றச்சாட்டுகள் குறித்து இன்போசிஸ் நிறுவனம் விளக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Arun
First published: