நுபுர் ஷர்மா நபிகள் நாயகத்தை அவதூறு செய்ததாக ஓடிக்கொண்டிருக்கும் சர்ச்சையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆர்.எஸ்.எஸ். மீது குற்றம்சாட்டியதையடுத்து அந்த அமைப்பின் தலைவர் இந்திரேஷ் குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
பினராயி விஜயன் இந்த விவகாரத்தில் கருத்துக் கூறிய போது, நபிகள் மீதான நுபுர் ஷர்மாவின் அவதூறு சங் பரிவார் மற்றும் ஆர்.எஸ்.எஸ். செயல்திட்டத்தின் ஒரு பகுதிதான் என்றும் இவர்கள் நாட்டிற்கு தர்ம சங்கடம் விளைவிக்கிறார்கள் என்றும் விமர்சனம் செய்திருந்தார்.
இதனையடுத்து ஏ.என்.ஐ செய்தி ஏஜென்சியிடம் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் இந்திரேஷ் குமார், “நாட்டில் சில கட்சிகள் எதற்கெடுத்தாலும் ஆர்.எஸ்.எஸ்.ஐக் கைகாட்டுவது ஒரு மோஸ்தராகி வருகிறது. ஆனால் இந்தியாவுக்கும் தெரியும் உலகத்திற்கும் தெரியும் ஆர்.எஸ்.எஸ் என்பது சமூக ஒழுங்கை வலியுறுத்தும் அமைப்பு என்பது.
ஆர்.எஸ்.எஸ்-ஐ நோக்கி விரல் நீட்டி குற்றம்சாட்டுவது என்பது சூரியன் மீது எச்சில் துப்புவது போலத்தான், சூரியன் மீது துப்பினால் என்ன ஆகும் அது நம் முகத்தில்தான் விழும். ஆகவே சிலபல அரசியல் கட்சிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் நான் கூறுவது என்னவென்றால் உங்கள் தோல்விக்காக எங்கள அமைப்பை சாடாதீர்கள் என்பதே. நாட்டை இத்தனை ஆண்டுகளாக ஆண்ட கட்சிகள் ஏன் மகாத்மா காந்தி கொல்லப்பட்டார் என்பதற்கான ஒரு நிரூபணத்தையும் இதுவரை கொடுக்கவில்லை.
கலவரம் நடந்தால் ஆர்.எஸ்.எஸ்-ஐத் திட்டுகிறார்கள். இவர்கள் மீது வழக்கு தொடர வேண்டும் என்கிறேன்.இவர்கள் இத்தகைய உண்மையற்ற அவதூறுத்தனமான பேச்சை நிறுத்திக் கொண்டால் நாட்டுக்கு நல்லது.
இதுவரை ஆர்.எஸ்.எஸ். தரப்பிலிருந்து எந்த ஒரு பொய்த்தகவலையும் கொடுத்ததில்லை. ஆர்.எஸ்.எஸ். சொல்வதெல்லாம் உண்மைதான். நாங்கள் யாரையும் தூண்டிவிடுவதில்லை. நாங்கள் சமூகத்தையும் மக்களையும் பிணைக்கவே பாடுபடுகிறோம்.
எனவே ஊடகம் மூலம் அரசியல் தலைவர்களுக்கும் மதத்தலைவர்களுக்கும் கூறிக்கொள்கிறேன், இவர்கள் நாகரிகமான மொழியில் பேசினால் நாடு நன்றாக இருக்கும். அவர்களும் நாட்டு மக்களிம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்” என்றார்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: RSS