கோவா சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட 13 அம்சங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார்.
கோவாவில் வரும் பிப்.14ம் தேதி 40 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிட உள்ள ஆம் ஆத்மி கட்சி தனது தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளது. இதையொட்டி, தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்தால் 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வேலை வாய்ப்பு மேம்படுத்தப்படும் என்றும், வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி அறிமுகமாகி ஓர் ஆண்டு நிறைவு!
இலவச குடிநீர், இலவச மின்சாரம், அரசு பள்ளிகள் மூலம் இலவச கல்வி ஆகிய வாக்குறுதிகளையும் ஆம் ஆத்மி கட்சி வழங்கியுள்ளது. சுகாதார கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு இலவச மருத்துவம் அளிக்கப்படும் என்றும் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் கவர்ச்சிகர அறிவிப்புகள் மூலம் கோவா தேர்தலில் காங்கிரஸ், பாஜகவுக்கு கடும் போட்டியை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால் கூறும்போது, கோவாவில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தால் அனைவர்க்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படும். தரமான கல்வி மற்றும் மருத்துவ சேவையை அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும். ஊழலற்ற மாநிலமாக கோவா மாற்றப்படும். அனைவருக்கும் இலவசமாக மின்சாரம் மற்றும் குடிநீர் சேவை வழங்கப்படும் என்று கூறினார்.
மேலும் படிக்க: 5 மாநில தேர்தல்: வாக்கு சேகரிக்கும் பணியில் அரசியல் தலைவர்கள் மும்முரம்!இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.