தோரந்தோ கருவூலத்தில் 139 கோடி ரூபாய் முறைகேடு செய்த வழக்கில் பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவிற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பீகாரில் லாலு பிரசாத் யாதவ் முதல்வராக இருந்தபோது கால்நடைகளுக்காக தீவனம் வாங்கியதில் பலகோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக லாலு மீது தொடரப்பட்ட 5 வழக்குகளில் நான்கில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
இந்த வழக்குகளில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவர் உடல் நலக்குறைபாடு காரணமாக ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில், தோரந்தோ கருவூலத்தில் 139 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை கடந்த ஜனவரி 29ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இதையும் படிங்க -
ஹிஜாப் விவகாரம்: அனைத்து மதத்தினரும் பள்ளி சீருடை விதிகளை பின்பற்ற வேண்டும்: அமித் ஷா
ரூ. 139 கோடி முறைகேடு வழக்கில் லாலு குற்றவாளி என கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று அவருக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் படி, லாலு பிரசாத் யாதவிற்கு 5 ஆண்டு சிறை தண்டனையுடன் 60 லட்ச ரூபாய் அபராதம் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க -
சித்ரா ராமகிருஷ்ணா தொடர்பில் இருந்த இமயமலை சாமியார் யார்? வெளியான அதிர்ச்சி தகவல்
இந்த வழக்கில் லாலு பிரசாத்துடன் சேர்ந்து 39 பேர் குற்றவாளிகள் என்று சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுகுறித்து லாலு பிரசாத் தனது ட்விட்டர் பதிவில், 'பிரிவினையை ஏற்படுத்தியவர்களுக்கு எதிரான நான் தொடர்ந்து போராடுவேன். அவர்களால் எங்களை வீழ்த்த முடியவில்லை. அதனால்தான் சதி வலையில் சிக்க வைத்துள்ளனர். நான் யாருக்கும் பயப்படவும் மாட்டேன், அடி பணியவும் மாட்டேன். எனது போராட்டம் தொடரும். ஒரு வீரனின் போராட்டத்தை கோழைகளால் உணர்ந்து கொள்ள முடியாது' என்று கூறியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.