காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.பி.என் சிங் இன்று திடீரென காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்ட நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இடம்பிடித்திருந்தவர் ஆர்.பி.என் சிங்.
மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய அமைச்சராக இருந்தவர் ரத்தன்ஜித் பிரதாப் நரேன் சிங். கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் பூர்வாஞ்சல் பகுதியைச் சேர்ந்த இவர் உத்தரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய தூண்களுள் ஒருவராக இருந்தார். ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவராக திகழ்ந்து வந்தார். குஷிநகர் சமஸ்தானத்தின் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர். மேலும் Padrauna தொகுதியில் இருந்து மூன்று முறை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில் இன்று காலை திடீரென காங்கிரஸில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
Also read: தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் இலவசங்கள் அறிவிப்பது தீவிரமான பிரச்னை : உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு!!
காங்கிரஸில் இருந்து விலகிய சில மணி நேரங்களில் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்துக்கு வந்த ஆர்.பி.என் சிங், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
ஆர்.பி.என் சிங்கின் வருகை கிழக்கு உ.பியில் பாஜகவுக்கு வலு சேர்ப்பதாக அமையும். Padrauna பகுதியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஸ்வாமி பிரசாத் மெளர்யா விட்டுச் சென்ற இடத்தை ஆர்.பி.என் சிங் நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also read:
இன்று நீங்கள் புகைப்பிடித்தால் நாளை உங்கள் பேத்திகளுக்கு உடல் பருமன் ஏற்படும் - புதுமையான ஆய்வு!!
பாஜகவில் இணைந்தது குறித்து ஆர்.பி.என் சிங் தெரிவித்ததாவது, “32 ஆண்டுகளாக காங்கிரஸுடன் இணைந்து விடாமுயற்சியுடன் பணியாற்றினேன். அப்போது இருந்த காங்கிரஸ் அடியோடு மாறிவிட்டது. இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் பிரதமர் மோடியின் கனவை நிறைவேற்ற, நாட்டை முன்னேற்ற வேண்டும் என்றால், கட்சிக்காரன் என்ற முறையில் தேவையான அனைத்தையும் செய்வேன்” என தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி நேற்று உ.பி தேர்தலுக்கு 30 பேர் அடங்கிய நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை வெளியிட்டார். அந்த பட்டியலில் ஆர்.பி.என் சிங்கின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் அவரின் திடீர் விலகல் கட்சியினருக்கும், தனிப்பட்ட முறையில் ராகுல் காந்திக்கும் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக இருப்பதாக கூறப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.