புதுச்சேரியில் கொலை வழக்கில் ஜாமினில் கைதாகி தலைமறைவான குற்றவாளியை பிடிக்க சென்ற காவலர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் கொலை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட ஜனார்த்தனன் தனது ரவுடி நண்பர்களுக்கு விருந்து வைக்கும் போது தான் போலீஸார் சுற்றி வளைத்துள்ளனர்.
புதுச்சேரி திருபுவனை பகுதியைச் சேர்ந்தவர் ஜனா என்ற ஜனார்த்தனன். இவர் தனது கூட்டாளிகளுடன் இணைந்து பல்வேறு வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார்.
கடந்த 2018ஆம் ஆண்டு தொழிலாளர் ஒப்பந்த சங்கத்தலைவரான வேல் அழகன் கொலை வழக்கில் ஜனார்த்தனன் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் ஜாமினில் வெளியே வந்த ஜனார்த்தனன், மீண்டும் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார்.
இதனால் ஜனார்த்தனனின் ஜாமினை ரத்து செய்த நீதிமன்றம், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. மேலும் ஜனார்த்தனன் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்தது.
இந்த நிலையில், தலைமறைவாகியிருக்கும் ஜனார்த்தனன், ரவுடி சாத்ராக் உள்ளிட்ட 12 பேர் ஆண்டியார்பாளையம் கிராமத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் மது விருந்தில் கலந்து கொண்டிருப்பதாக திருபுவனை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து உதவி ஆய்வாளர் ராஜசேகர், போலீசார் பார்த்தசாரதி, நடராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஜனார்த்தனனை கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசாரைக் கண்டதும் மற்ற ரவுடிகள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கி, கத்தி, வெடிகுண்டுகளை காட்டி மிரட்டி கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.
தகவலறிந்த முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அலுவால், கண்காணிப்பாளர் ரங்கநாதன் மற்றும் 50 க்கும் மேற்பட்ட போலீசார் கரும்பு தோட்டத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் அனைவரும் தப்பியோட ரவுடி சாத்ராக் மட்டும் பிடிபட்டார். அவரை கைது செய்த போலீசார், அங்கிருந்த துப்பாக்கி, கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காவலர்கள் மீது ரவுடிகள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜனா மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.