விவசாயிகள் காட்டுமிராண்டிகளா ? சென்னை பள்ளியின் 10ஆம் வகுப்பு வினாத்தாளால் சர்ச்சை!

விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் தொடர்ந்து 2 மாதங்களுக்கும் மேலாக வெயில், மழை பாராது போராடி கொண்டிருக்கும் சூழலில் பள்ளி வினாத்தாளில் விவசாயிகள் போராட்டத்தை காட்டுமிராண்டித்தனம் என சுட்டிக்காட்டி கேள்வி கேட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் காட்டுமிராண்டிகளை ஒடுக்க எத்தகைய நடவடிக்கை எடுக்கலாம் என்று பத்தாம் வகுப்பு தேர்வில் கேள்வி கேட்டிருப்பது சர்ச்சையாகி உள்ளது.

 

சென்னையில் டி.ஏ.வி. எனும் சிபிஎஸ்இ பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது பருவத்தேர்வு நடைபெற்று வருகிறது. அதில் ஆங்கிலத் தேர்வு வினாத்தாளில் ஐந்து மதிப்பெண் கேள்வியில் டெல்லியில் போராடும் விவசாயிகள் குறித்து கேட்கப்பட்டுள்ளது. அதில் டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் தேசியக் கொடி அவமதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. நாட்டின் நலனை பிரதானமாக கொள்ளாமல், தனிநபர் விருப்பத்தின் பேரில் போராட்டம் நடைபெற்றதாகவும் வினாத்தாளில் அச்சிடப்பட்டிருந்தது.

டெல்லியில் போராடும், விவசாயிகள் காட்டு மிராண்டிகள் என்றும் அவர்களை ஒடுக்க எத்தகைய நடவடிக்கை எடுக்கலாம் எனவும் கேட்கப்பட்டுள்ளது. அது குறித்து நாளிதழ் ஆசிரியர் ஒருவருக்கு கடிதம் எழுதும்படியும் வினாத்தாளில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது .

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து 2 மாதங்களுக்கும் மேலாக வெயில், மழை பாராது போராடி கொண்டிருக்கும் சூழலில் பள்ளி வினாத்தாளில் விவசாயிகள் போராட்டத்தை காட்டுமிராண்டித்தனம் என சுட்டிக்காட்டி கேள்வி கேட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே கடந்த ஜனவரி 26ம் தேதி நாட்டின் குடியரசு தினத்தன்று விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது. டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றும் கொடிக்கம்பத்தில் சீக்கிய மதக் கொடியை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் சிலர் ஏற்றினர். இது பெரும் சர்ச்சையையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியிருந்தது. இதில் ஈடுபட்ட சில விவசாய சங்கங்களை கிசான் விவசாயிகள் சங்கம் பொது மேடையில் இணைந்து போராட்டத்தில் ஈடுபட அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது.

 

 
Published by:Arun
First published: