ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணிக்கு எதிராக ரூபா உட்பட யாரும், எவ்வித கருத்தும் கூறக்கூடாது என்று பெங்களூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி மீது ஐ.பி.எஸ். ரூபா பொதுவெளியில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அண்மையில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ரோகிணி சிந்தூரி, மைசூரு மாவட்ட ஆட்சியராக இருந்தபோது மதசார்பற்ற ஜனதாதள எம்எல்ஏ மகேஷுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்தாகவும் ஆனால் தற்போது மகேஷுடன் ரோகிணி சமாதானம் பேசுவதாக புகார்களையும் ரூபா முன்வைத்துள்ளார்.
உலகமே கொரோனா பாதிப்பில் இருந்த போது, 2021ம் ஆண்டு அரசு குடியிருப்பில் ரோகிணி வசித்த வீட்டில் சொகுசு நீச்சல் குளம் கட்டியதாகவும், ரூபா குற்றம்சாட்டியுள்ளார். மேலும் கோலார் பகுதியில் பணியில் இருந்த ஐஏஎஸ் அதிகாரி ரவி இறப்புக்கும் ரோகிணிக்கும் தொடர்பு உள்ளதா என்றும் சந்தேகமும் எழுப்பியுள்ளார். பல்வேறு ஊழல் புகார்களிலும் ரோகிணிக்கு தொடர்பு உள்ள போது ஏன் அதனை இன்னும் விசாரிக்கவில்லை என்றும் ஐபிஎஸ் அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார். அரசியல்வாதிகளை அரசு அதிகாரி சந்திக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேட்டுள்ள ரூபா, கட்டப்பஞ்சாயத்து செய்து ரோகிணி பேரம் பேசுகிறாரா என்றும் கேட்டுள்ளார். இப்படி கிட்டத்தட்ட 20 புகார்களை ரோகிணி மீது ரூபா அடுக்கியுள்ளார்.
இவர்கள் இடையிலான கருத்து மோதல் முற்றியதை அடுத்து, இரண்டு பேரும் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து தன்னைப்பற்றிய அவதூறு கருத்துக்கு விளக்கம் அளிக்க கோரி ரூபாவிற்கு ரோகிணி தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றால், மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என்று ரோகிணி எச்சரித்து இருந்தார்.
இந்நிலையில், தன்னை பற்றி அவதூறு கருத்துகளை பரப்புவதற்கு தடை விதிக்கக் கோரி, ரோகிணி பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், ரூபா உள்ளிட்ட யாரும், ரோகிணி குறித்து எவ்வித அவதூறு கருத்தும் கூறக்கூடாது என்று உத்தரவிட்டது. மேலும் எதிர்தரப்பினர் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ள நீதிமன்றம், விசாரணையை மார்ச் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: High court, IAS Transfer, Karnataka, Rohini IAS