நம் நாட்டின் 74 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மக்கள் தங்கள் தேசபக்தியை வெளிப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் சுயவிவர படத்தில் தேசியக்கொடியை வைப்பது, வீடுகளில் கொடி ஏற்றுவது என்று செய்து வருகின்றனர். இந்திய தேசியக் கொடியின் பயன்பாடு, காட்சிப்படுத்தல் மற்றும் ஏற்றுதல் தொடர்பான சட்டங்கள் மற்றும் மரபுகளை இந்தியக் கொடிக் குறியீடு கொண்டுள்ளது. தனியார், பொது மற்றும் அரசு நிறுவனங்கள் தேசியக் கொடியை எவ்வாறு கையாளவேண்டும் வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறது. குடிமக்கள் தேசியக் கொடியை எளிதாகப் பெறுவதற்காக, இந்தியக் கொடிக் குறியீடு அரசாங்கத்தால் திருத்தப்பட்டுள்ளது.
தேசியக் கொடியை எப்போது ஏற்றலாம்? இந்திய அரசு சமீபத்தில் செய்த திருத்தங்கள்படி, தேசியக் கொடியை இரவும் பகலும் ஏற்ற அனுமதிக்கிறது. திறந்த வெளியிலோ அல்லது பொதுமக்களின் வீட்டிலோ ஏற்றலாம்.
வீட்டில் தேசியக் கொடியை ஏற்றும் போது கவனிக்க வேண்டியவை
காட்சிக்கு வைக்கப்படும் மூவர்ணக் கொடி மரியாதைக்குரிய இடத்தில் தெளிவாக, நேர்த்தியாக வைக்க வேண்டும்.
சேதமடைந்த அல்லது சிதைந்த கொடியை ஒருபோதும் ஏற்றக்கூடாது.
தேசியக் கொடி எப்போதும் சரியான நிலையில் இருக்க வேண்டும். சாய்ந்தோ சரிந்தோ வைக்கக் கூடாது.
கொடியை ஏற்றும் கம்பம் நேரானதாக இருக்க வேண்டும். வளைந்து இருத்தல் கூடாது. வீடு அல்லது கட்டிடத்தின் மேல் உரிய கம்பில் மட்டுமே பறக்க விட வேண்டும்
தேசியக் கொடியை விட உயரமாகவோ அல்லது மேலேயோ அல்லது அருகருகேயோ வேறு எந்தக் கொடியும் வைக்கப்படக்கூடாது.
மற்றக் கொடிகளோடு ஏற்றும் போது, அதை விட உயரமான கம்பத்தில் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும்.
கம்பத்தின் உச்சியில் ஏற்ற வேண்டும். தரையினை தொடும் வகையில் தாழ்வாக பறக்க விடக்கூடாது. தலைப்பாகையாகவோ, முகக்கவசமாகவோ பயன்படுத்தக்கூடாது.
மூவர்ணக் கொடியை ஒருபோதும் தலைகீழாகக் கட்டவோ ஏற்றவோ கூடாது, அதாவது காவி ஒருபோதும் கீழே இருக்கக்கூடாது.
மூவர்ண கொடிமேல் மலர்கள் தூவுதல் கூடாது. மலர்கள், மாலைகள் உள்ளிட்ட எந்தப் பொருளையும் கொடிக்கம்பத்தில் அல்லது அதற்கு மேலே வைக்கக் கூடாது.
தேசியக் கொடியை அலங்காரத்துக்காகவோ, மாலையாகவோ, சால்வையாகவோ வேறு எந்த வகையிலும் பயன்படுத்தக் கூடாது.
தேசியக் கொடியானது எந்த சூழ்நிலையிலும் தரையில் வீழக்கூடாது. தண்ணீரில் வீழவோ, மிதக்கவோ விடக்கூடாது.
கொடியில் எழுத்து இருக்கக்கூடாது. மேசையின் மீது விரிப்பாக விரிக்கக்கூடாது. ஜன்னல்களில் திரைசீலையாக பயன்படுத்தக்கூடாது.
கொடியின் மீது நமது கால்படக்கூடாது.குப்பைத் தொட்டியில் கொடியை வீசக்கூடாது
கொடியை பயன்படுத்திய பிறகு நேர்த்தியாக மடித்து தனித்து வைக்க வேண்டும்.
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.