ஜனவரி 26, நாட்டின் 74ஆவது குடியரசு தினம் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. இந்தாண்டு குடியரசு தின கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நாடு முழுவதும் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பதா அல் சிசி பங்கேற்கிறார்.
ராணுவ டாட்டூ மற்றும் பழங்குடி நடன விழா
74 வது குடியரசு தினம் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 126ஆவது பிறந்தநாள் விழாவை ஒருங்கே கொண்டாடும் வகையில், ஜனவரி 23, 24 தேதிகளில் ராணுவத்தினர் Military Tattoo என்ற பெயரில் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை மேற்கொண்டனர். இந்திய ராணுவம் குதிரை கண்காட்சி, ராட்ச ஏர் பலூன் கண்காட்சி, மோட்டார் வாகன கண்காட்சி, நாவாய் படை கண்காட்சி என பல்வேறு நிகழ்சிகளை மேற்கொண்டன. அதேபோல், நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு பழங்குடி கலைஞர்கள் வருகை தந்து கட்கா, களரிபயத்து, மல்லாகம்ப், தங்க்தா மற்றும் குக்ரி ஆகிய நடனங்களை மேற்கொண்டனர்.
குடியரசுத் தின விழா அணிவகுப்பு
ஜனவரி 26ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி தேசிய போர் நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்துவார். பின்னர் குடியரசுத் தலைவர் தேசியகொடி ஏற்றி தேசிய கீதம் பாடப்படும்.
தொடர்ந்து குடியரசு தின விழா அணி வகுப்பு நடைபெறும். இதில் நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் வலுவான பாதுகாப்பு ஆகியவற்றை சித்தரிக்கும் 23 அலங்கார ஊர்திகள் இடம்பெறுகின்றன. 17 ஊர்திகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்தும், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் சார்பில் 6 ஊர்திகளும் இந்த அணிவகுப்பில் இடம்பெறுகின்றன.
ராணுவ வீரர்களின் வீறுநடை நிகழ்வு
ஜனவரி 29ஆம் தேதி அன்று விஜய் சவுக் பகுதியில் Beating Retreat எனப்படும் ராணுவ வீரர்களின் வீறு நடை நிகழ்வு நடைபெறுகிறது. இதை டெல்லி நார்த் பிளாக் மற்றும் சவுத் பிளாக் பகுதியில் 3D ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
ட்ரோன் ஷோ
அதே தினமான ஜனவரி 29ஆம் தேதி மாலை அன்று ரைசினா ஹில்ஸ் பகுதியில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 3,500 ட்ரோன்களை வானில் பறக்கவிடும் கண்காட்சி நடைபெறவுள்ளது. கடந்தாண்டு 1,000 ட்ரோன்கள் பறக்கவிடப்பட்ட நிலையில், இந்தாண்டு அதை மும்மடங்காக உயர்த்தியுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.