மாடர்னாவின் கொரொனா தடுப்பூசி எப்படி வேலை செய்யும்?ஆய்வுகள் கூறுவதென்ன?

மாடர்னாவின் கொரொனா தடுப்பூசி எப்படி வேலை செய்யும்?ஆய்வுகள் கூறுவதென்ன?

மாடர்னாவின் கொரொனா தடுப்பூசி

டிசம்பர் 17ம் தேதியன்று மாடர்னாவின் இந்த தடுப்பு மருந்து அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கழகமான எஃப்டிஏ-வினால் சீராய்வுக்குட்படுத்தப்படவிருக்கிறது. அதன் பிறகு அவசரகால அனுமதிக்கான பச்சைக்கொடி காட்டப்படும் என்று தெரிகிறது.

 • Share this:
  உலகம் முழுதும் கொரோனா வைரஸ் பரவல் ஆட்டிப்படைத்து வரும் நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6 கோடியே 55 லட்சத்து 28 ஆயிரத்து 133 ஆக உள்ளது. பலியானோர் எண்ணிக்கை 15 லட்சத்து 11 ஆயிரத்து 726 ஆக அதிகரித்துள்ளது.

  உலகம் முழுதும் இன்னமும் 1 கோடியே 86 லட்சத்து 45 ஆயிரத்து 334 பேர் கொரோனா சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மருந்து 95 சதவீத திறன் படைத்தது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

  அதாவது, மனித உடல் எதிர்ப்பாற்றல் அமைப்பில் ஆற்றல் மிகுந்த ஆண்ட்டி-பாடிகளை உற்பத்தி செய்து அது 3 மாதகாலம் வரைக்கும் உடலில் தக்க வைக்கும் திறன் மாடர்னா தடுப்பூசிக்கு உண்டு என்பது தற்போதைய ஆய்வில் வெளியாகியுள்ளது.

  இந்தத் தடுப்பூசி மருந்தை சேர்ந்து தயாரித்த தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் கழகம் (National Institute for Allergies and Infectious Diseases- NIAID)ஆய்வு மேற்கொண்ட போது 34 பங்கேற்பாளர்களிடம் மருந்தின் எதிர்பாற்றலை சோதித்துப் பார்த்தது. இதில் 3 மாதங்கள் வரை இந்த தடுப்பூசியின் பலன்கள் உடலில் இருந்து கொரோனாவைத் தடுப்பதாக இவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

  இந்த வாக்சினின் பெயர் mRNA-1273, இதனை பங்கேற்பாளர்களுக்கு இருமுறை செலுத்தி பரிசோதிக்கப்பட்டதாக நியூ இங்கிலாந்து மருத்துவ இதழில் இந்த ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

  உடலில் உள்ள கொரோனா தடுப்பு ஆண்ட்டிபாடிகளின் எண்ணிக்கை 3 மாதக் காலத்துக்குப் பிறகு குறைந்தாலும் அதனால் கவலைப்பட வேண்டிய தேவையில்லை என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

  அமெரிக்க தொற்று நோய் நிபுணர் ஆண்டனி ஃபாஸி இது பற்றி கூறும்போது உடல் நோய் எதிர்ப்பமைப்புகள் வைரஸ் பற்றிய நினைவுடன் இருக்கும் என்பதால் பின்னால் கொரோனாவினால் பாதிக்கப்பட்டாலும் உடல் வைரஸின் நினைவுடன் இருக்கும் என்பதால் கொரோனாவை தடுக்க புதிய எதிர்ப்பாற்றல்களை உருவாக்கும் என்று கூறுகிறார்.

  இந்த வாக்சின் ஒரு குறிப்பிட்ட நோய் எதிர்ப்பாற்றல் உடைய செல்லை செயலூக்கப்படுத்தி வைரஸ் குறித்த நினைவைத் தூண்டுகிறது என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

  டிசம்பர் 17ம் தேதியன்று மாடர்னாவின் இந்த தடுப்பு மருந்து அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கழகமான எஃப்டிஏ-வினால் சீராய்வுக்குட்படுத்தப்படவிருக்கிறது. அதன் பிறகு அவசரகால அனுமதிக்கான பச்சைக்கொடி காட்டப்படும் என்று தெரிகிறது.

  பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசி மருந்தும் எம்-ஆர்.என்.ஏ வடிவ அடிப்படையில் தயாரிக்கப்படுவதாகும். இந்த எம்-ஆர்.என்.ஏ. மரபணு கூறுகளையே பயன்படுத்துகிறது. இந்த எம்-ஆர்.என்.ஏ. கொழுமிய மூலக்கூறில் அடைக்கப்பட்டு நம் உடலில் செலுத்தப்படும்போது நம் தசைகளின் உள்ளே உள்ள செல்களின் மூலம் கொரொனா வைரஸின் மேற்புற புரோட்டீன் போன்ற ஒன்றை உருவாக்குகிறது.

  இதன் மூலம் உண்மையில் கொரோனா தொற்றி விட்டதான மாயத்தோற்றம் உருவாக்கப்பட்டு ஆண்ட்டிபாடிகள் உற்பத்தியை தூண்டி விடுகிறது, இது உண்மையாகவே வைரஸ் தொற்றும்போது அதைத் தடுக்கவல்லது, என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: