மும்பையில் இதுவரை இல்லாத அளவுக்கு 2,000 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.அது எவ்வாறு உருவானது? போதைக்காகவே உருவாக்கப்பட்டதா? அதன் உண்மையான பயன்பாடு என்ன என்பதை பார்க்கலாம்.
மனிதனின் புத்தியை மழுங்கடித்து, உடல் நலத்திற்கும், சமுதாயத்திற்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துவது போதைப்பொருள். மனிதன் முதன்முதலில் எப்படி போதைக்கு அடிமையாகி இருப்பான் என்பதற்கு, இதுவரை எந்த ஆய்வாளர்களிடமும் விடை இல்லை.
விலங்குகளில் போதை ஏற்றிக் கொள்ளும் பெருங்கூட்டங்களைப் பார்த்து மனிதனும் விலங்காகி இருக்கலாம் என்பதே சில ஆய்வாளர்களின் கருத்து. காட்டுப் பகுதியில் யானைகள் முதல் அணில், காட்டுப் பூனைகள் வரை சில தாவரங்களை பயன்படுத்தி வருகின்றன போதைக்காக.
காய், பழம் தொடங்கி, வெறும் இலையில் கூட போதையை பொத்தி வைத்திருக்கின்றன சில காட்டுத் தாவரங்கள். விடிந்தும் விடியாமல் டாஸ்மாக் போகும் குடிமகன்களைப் போல, குறிப்பிட்ட நேரத்தில் அந்த தாவரங்களை தேடி ஓடுவது விலங்குகளின் வழக்கம்.
அதைப் பார்த்த மனிதனும் அந்த தாவரங்களையோ, பழங்களையோ பறித்துத் தின்று, போதையை கற்றுக் கொண்டிருக்கலாம். அதன் தொடர்ச்சியாக, போதைத் தாவரங்களை பயிரிடவும், அதை பயன்படுத்தவும் 10,000 ஆண்டுகளுக்கு முன்பே பழகிவிட்டான் மனிதன்.
ALSO READ | துண்டிக்கப்பட்ட கை.. கிணற்றில் வீசப்பட்ட உடல் - அழகு நிலைய ஊழியர் கொடூர கொலை
இன்றைய போதை மனிதர்கள் பயன்படுத்தும் பொருட்களிலேயே மிகவும் விலை உயர்ந்தது, ஹெராயின் என்ற போதைப்பொருள்தான். டோப் என்று அழைக்கப்படும் ஹெராயினுக்கு, அதை புழங்கும் நபர்களிடையே டீசல், குதிரை, பிரவுன் என ஏராளமான புனைப்பெயர்கள் உண்டு.
ஹெராயினை 1874ஆம் ஆண்டு கண்டுபிடித்தவர் பிரிட்டனைச் சேர்ந்த ஆல்டர் ரைட் என்ற வேதியியலாளர். வலியை நீக்கி, மயக்கமூட்டும் மார்பின் மருந்தைவிட வீரியமான மயக்க மருந்தை கண்டுபிடிக்க முயற்சித்தபோது கிடைத்ததுதான் ஹெராயின். மார்பின் வேதிப்பொருளுடன், வேறு சில அமிலங்களை கலந்து எதையோ தயாரிக்க முயன்றவர், ஹெராயினை தயாரித்துவிட்டார். மிகச் சிறந்த மருத்துவக் குணம் கொண்டதாக கருதி, அதை மருத்துவத்திலும் பயன்படுத்தத் தொடங்கினார் ஆல்டர் ரைட்.
1897ல் ஹெராயின் என்ற பெயரை ட்ரேட் மார்க்காக ஜெர்மனியைச் சேர்ந்த பேயர் நிறுவனம் பதிவு செய்ய, ஆஸ்பிரின் மருந்துக்கு மாற்றாக பயன்படுத்தப்பட்டது ஹெராயின். 1910 வரை மருத்துவத் துறையில் கொடிகட்டிப் பறந்த ஹெராயினுக்கு, அதன் பிறகு தொடங்கியது சோதனைக் காலம். ஹெராயின் மருந்தை பயன்படுத்திய பலருக்கு, ஈரல் அழுகல், நுரையீரல் பாதிப்பு என பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் உறுதியானது. அதைத் தொடர்ந்துதான், உலகம் முழுவதும் ஹெராயின் தடை செய்யப்பட்டாலும், அதற்கு முன்பே அடிமையாகிப் போயிருந்தார்கள் ஆயிரக்கணக்கானோர்.
மற்ற போதைப்பொருட்களை விட, ஹெராயின் ரத்தத்தில் வேகமாக கலந்துவிடுவதால், உலகம் முழுவதும் உருவானது டிமாண்ட். எனவே, மாற்றுப் பெயரில் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இப்போதும் மருந்துக் கடைகளில் கிடைக்கிறது ஹெராயின். மருத்துவத்தின் பெயரில் நடக்கும் மிகப்பெரிய திருட்டுத்தனங்களில் இதுவும் ஒன்று என்பது மறுப்பதற்கில்லை. மருந்துகளைக் கூட அளவுக்கு அதிகமாக எடுக்கும்போது, அவை உயிரையே குடித்துவிடும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
நிதானமாக இருப்பவர்களே அதிக அளவு மருந்தால் பலியாகும்போது, ஹெராயினுக்கு அடிமையானவர்களுக்கு அதை கண்டறியும் தன்மை இருக்கவே இருக்காது. ஹெராயின் வகை போதைப்பொருட்களை எடுத்துக் கொண்டவர்களின் மனநிலை மாறுவதோடு, உணர்வுகளும் மாறும். நேரடியாக மூளையைப் பாதித்து, செயல்பாட்டையே மாற்றும் வகையிலான ரசாயனக் கலவைதான் ஹெராயின். இதை பயன்படுத்துவது மிகப்பெரும் ஆபத்து என்பதாலேயே உலகம் முழுவதும் ஹெராயினுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இனியும் இதை விற்பதும், பயன்படுத்துவதும் மனித குலத்திற்கு இழைக்கும் மாபெரும் துரோகத்தைத் தவிர வேறில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Drug addiction, Smuggling