நாட்டின் இரண்டாம் பிரதமரான லால் பஹதூர் சாஸ்திரியின் 55-வது நினைவு தினம் இன்று..

நாட்டின் இரண்டாம் பிரதமரான லால் பஹதூர் சாஸ்திரியின் 55-வது நினைவு தினம் இன்று..

லால் பஹதூர் சாஸ்திரி

1961-ஆம் ஆண்டில் உள்நாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் பதவிக்கு நியமிக்கப்பட்ட பின்னர் சாஸ்திரி ஒரு திறமையான மத்தியஸ்தராக புகழ் பெற்றார். பிரதமர் ஜவஹர்லால் நேரு நோய்வாய்ப்பட்டதால், சாஸ்திரி நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

  • Share this:
அமைதியான மனிதர் என்று அழைக்கப்படும் லால் பகதூர் சாஸ்திரியின் (Lal Bahadur Shastri) 55வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்திய நாட்டின் இரண்டாம் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 1964 முதல் 1966 வரை ஆட்சி செய்தார். மேலும், அவர் தனது ஆட்சி காலத்திலேயே உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது. 1966-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11ம் தேதியன்று உஸ்பெகிஸ்தானின் (Uzbekistan’s தலைநகர் தாஷ்கண்ட் (Tashkent) சென்றிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அதன் படி இன்று, மறைந்த காங்கிரஸ் தலைவரான லால் பகதூர் சாஸ்திரியின் 55வது நினைவு தினம் நிறைவடைந்துள்ளது.

மகாத்மா காந்தியின் தீவிர பக்தரான சாஸ்திரி 1904-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி அன்று உத்தரபிரதேச (Uttar Pradesh) மாநிலத்தில் உள்ள முகலசரையில் (Mughalsarai) எனும் இடத்தில் பிறந்தார். அவர் வறுமையிலும், பிரிட்டிஷ் ஆட்சியிலும் வளர்ந்த ஒரு மனிதர். கடுமையான வெப்பத்தில் கூட அவர் தினமும் பல மைல்கள் நடந்து பள்ளிக்கு செல்வாராம். சாஸ்திரி தனது ஒன்றரை வயதில் தந்தையை இழந்தார். அந்த காலத்தில் ஒரு குழந்தையாக அவர் எதிர்கொண்ட அனைத்து சூழ்நிலைகளும், அவருக்கு அரசியலிலும், அப்போது மகாத்மா காந்தி தலைமையிலான தேசிய சுதந்திரப் போராட்டத்திலும் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது.

அவருக்கு 16 வயது இருக்கும் போது முதன்முதலில் ஒரு அரசியல் இயக்கத்தில் இணைந்தார். பிறகு பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெறவும், ரவுலட் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும் காந்தி தனது நாட்டு மக்களை வலியுறுத்திய பின்னர் 1920-ல் சாஸ்திரி ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்தார். பின்னர் சாஸ்திரிக்கு அரசியலில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் சாஸ்திரியின் அரசியல் ஈடுபாடு அவரின் குடும்பத்தினரால் பெரிதும் பாராட்டப்படவில்லை. ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்தபின், சாஸ்திரி வாரணாசியில் காஷி வித்யா பீத்துடன் இணைந்தார்.

காசியில் படித்த பிறகு மிகப் பெரிய புத்திஜீவிகள் மற்றும் நாட்டின் தேசியவாதிகளிடம் இருந்து சாஸ்திரிக்கு நீடித்த செல்வாக்கு கிடைத்தது. காசியில் அவரது பாடநெறிக்காக அவருக்கு வழங்கப்பட்ட மற்றொரு விஷயம், ‘சாஸ்திரி’ என்ற பெயர். இது உண்மையில், வித்யா பீடம் அவருக்கு வழங்கிய இளங்கலை பட்டம் ஆகும். நாளடைவில் சாஸ்திரி என்ற பட்டம் அவரது பெயரின் ஒரு அங்கமாகவே மாறியது.  காலனித்துவ ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, சாஸ்திரி அரசாங்கத்தின் முக்கியமான உறுப்பினரானார்.

1952 ஆம் ஆண்டில், ரயில்வே மற்றும் போக்குவரத்துக்கான மத்திய அமைச்சரானார். 1961-ஆம் ஆண்டில் உள்நாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் பதவிக்கு நியமிக்கப்பட்ட பின்னர் சாஸ்திரி ஒரு திறமையான மத்தியஸ்தராக புகழ் பெற்றார். பிரதமர் ஜவஹர்லால் நேரு நோய்வாய்ப்பட்டதால், சாஸ்திரி நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, 1966-ஆம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி அப்போதைய பாகிஸ்தான் அதிபர் அயூப்கானுடன் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட சாஸ்திரி தாஷ்கண்டிற்கு சென்றிருந்தார். ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர், ஜனவரி 11ம் தேதி அதிகாலையில், சாஸ்திரி மாரடைப்பால் இறந்ததாகக் செய்திகள் வெளிவந்தன. சாஸ்திரியின் மறைவு கொலையாக இருக்கலாம் எனவும் பல்வேறு தகவல்கள் அப்போது வெளிவந்தன. ஏனெனில் கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கும் அளவுக்கு அப்போதைய சூழ்நிலைகள் மற்றும் நிகழ்வுகள் இருந்ததாக கூறப்படுகிறது. ஒருமுறை, ஏழை, எளிய குடும்ப பிண்னணியில் இருந்து சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நிதி உதவி அளிக்க Servants of India Society என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்த உதவித்தொகையை பெற்றவர்களில் லால் பகதூர் சாஸ்திரியும் ஒருவர். அவரது குடும்ப செலவுகளுக்கு மாதம் ரூ.50 வழங்கப்பட்டது. அந்த சமயம் சிறைக்கு சென்ற சாஸ்திரி, தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தில் ரூ.50 குடும்ப செலவுகளுக்கு சரியாக இருக்கிறதா என கேட்டுள்ளார். அதற்கு பதில் கடிதம் அனுப்பிய அவரது மனைவி லலிதா சாஸ்திரி, ரூ.40-க்குள் குடும்ப செலவுகளை முடித்து விடுவதாகவும், ரூ.10-ஐ சேமித்து வைப்பதாகவும் எழுதியிருந்தார். இந்த கடிதத்தை படித்த சாஸ்திரி, தனது குடும்ப செலவுகளுக்கு ரூ.40 போதுமானது எனவும், மீதமுள்ள ரூ.10-ஐ வேறு யாருக்கேனும் கொடுத்து விடுங்கள் என்றும் Servants of India Society அமைப்புக்கு அவர் கடிதம் எழுதியிருந்தாராம்.
Published by:Gunavathy
First published: