பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வு முட்டாள்தனமானது - சுப்பிரமணியன் சுவாமி

சுப்பிரமணியன் சுவாமி

 • News18
 • Last Updated :
 • Share this:
  பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது முட்டாள்தனமானது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.

  2008-ம் ஆண்டு உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தத்தின் போது கச்சா எண்ணெய்யின் விலை மிகப்பெரிய சரிவை சந்தித்து. அதற்கு பிறகு தற்போது கச்சா எண்ணெய்யின் விலை அதற்கு இணையான சரிவை சந்தித்துள்ளது.

  உலகின் 105 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதால் கச்சா எண்ணெய்யின் தேவை குறைந்து விலை சரியத் தொடங்கியது. விலை சரிவை தடுப்பதற்கு, உற்பத்தியை குறைப்பது தொடர்பாக, உலகில் அதிக அளவு கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளான, சவுதி அரேபியாவுக்கும் ரஷ்யாவுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

  இதைத்தொடர்ந்து கச்சா எண்ணெய்யின் விலை மேலும் சரிவை சந்தித்தது. உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. ஆகவே, பெட்ரோல் மற்றும் டீசலின் விலை கடந்த வாரத்தில் குறைக்கப்பட்டது.

  கச்சா எண்ணெய்யின் விலை மேலும் சரிவடைந்ததை தொடர்ந்து, இந்த சாதகமான சூழலை பயன்படுத்திக்கொள்ளும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

  இதன்படி, பெட்ரோலுக்கான கலால் வரி இரண்டு ரூபாய் முதல் 8 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. டீசலுக்கான கலால் வரி நான்கு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

  இதுதவிர, சாலை வரி பெட்ரோலுக்கு ஒரு ரூபாயும், டீசலுக்கு 10 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளன. கச்சா எண்ணெயின் விலை மிகப்பெரிய அளவில் சரிந்திருந்தாலும், கலால் வரி உயர்த்தப்பட்டதால், பெட்ரோல் மற்றம் டீசலின் தற்போதைய விலையில் பெரிய மாற்றம் இருக்காது என்று கூறப்படுகிறது.

  இந்த நிலையில், அரசின் இந்த நடவடிக்கை முட்டாள்தனமானது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.  ட்விட்டரில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வு பற்றிய ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அவர், “நிதியமைச்சரே பொதுமக்களுக்கு பதிலளிக்க கடமைப்பட்டவர். நான் அல்ல. குடியரசுத்தலைவர் என்னை எம்.பி.யாக நியமித்துள்ளார். எனினும், பொருளாதார நிபுணராக இந்த விலை உயர்வு முட்டாள்தனமானது என்று கூறுவேன்.

  பொருளாதார நீதி மற்றும் வளர்ச்சிக்கு பெட்ரோல் விலை ரூ.40-ஐ தாண்டக்கூடாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

  கலால் வரி உயர்வுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளது.
  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube  Published by:Sankar
  First published: