அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை பாதிப்பு- காரணம் என்ன? சிசிச்சை முறை என்ன?

கரும்பூஞ்சை பாதிப்பு

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், கரும்பூஞ்சை பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 • Share this:
  மத்திய, மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கைகள் காரணமாக, நாடு முழுவதும் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில், தொற்று பரவலில் இருந்து குணமடைந்தவர்கள் மத்தியில், கரும்பூஞ்சை பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொற்றுக்கான சிகிச்சையின் போது எடுத்துக் கொள்ளும் ஸ்டிராயிடுகள் காரணமாக, உடலில் சக்கரையின் அளவு அதிகரித்து நோய் எதிர்ப்புத் தன்மை குறைவதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

  அந்த வகையில், தற்போது நாடு முழுவதும் 11,717 பேருக்கு கரும்பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக குஜராத்தில் 2,859 பேரும், மகாராஷ்டிராவில் 2,770 பேரும் கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் 236 பேர் கரும்பூஞ்சை பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவதாக, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  துவைக்காமல் ஒரே மாஸ்கை தொடர்ந்து பயன்படுத்துவது மற்றும் அதிகப்படியாக ஆவி பிடிப்பதனால் கூட, சுவாசப்பாதை பாதிக்கப்பட்டு பூஞ்சை தொற்று உண்டாகலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.  இந்த பாதிப்புக்கான சிகிச்சைக்கு முதன்மையாக ஆம்போடெரிசின் - பி ((Amphotericin B)) எனும் மருந்து பரிந்துரைக்கப்படுகிறது.

  பாதிப்புகளுக்கு ஏற்ப மத்திய அரசும், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்த மருந்தை பகிர்ந்து அளித்து வருகிறது. இந்த மருந்து மூலம் சுமார் 6 வாரங்கள் வரை சிகிச்சை தொடரும் எனவும், ஒரு நபருக்கே 90 முதல் 120 முறை வரை ஊசி மூலம் ஆம்போடெரிசின் - பி மருந்தை செலுத்த வேண்டி இருக்கும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ஒரு நபருக்கே 100 வயல்கள் வரை இந்த மருந்து தேவைப்படுகிறது.

  ஆனால், மே மாதத்தில் இந்தியாவில் ஒரு லட்சத்து 63 ஆயிரம் வயல்கள் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் எனவும், மூன்றரை லட்சம் வயல்கள் இறக்குமதி செய்யப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆம்போடெரிசின் - பி மருந்துக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், கள்ளச்சந்தையிலும் இதன் விற்பனை அதிகரித்துள்ளது. இதனிடையே, வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சையும் பரவி வருவது, பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: