ஹோம் /நியூஸ் /இந்தியா /

உபரி நிதி 1,76,000 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்!

உபரி நிதி 1,76,000 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்!

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி பற்றாக்குறையை 3.3 விழுக்காட்டிற்குள் தக்கவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

ரிசர்வ் வங்கியின் உபரிநிதி ஒரு லட்சத்து 76,000 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு வழங்க இயக்குநர்கள் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை நிலையாக வைத்திருக்கவும், பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்கவும், பொருளாதார நெருக்கடி காலங்களில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்காகவும், உபரிநிதியை ஒரு நாட்டின் மத்திய வங்கிகள் கையிருப்பாக வைத்திருப்பது வழக்கம். அப்படித்தான் ரிசர்வ் வங்கி உபரி நிதியை கையிருப்பாக வைத்திருக்கிறது.

உலகின் மற்ற நாட்டு மத்திய வங்கிகளின் சராசரி கையிருப்பு 14 விழுக்காடாக உள்ள நிலையில் ரிசர்வ் வங்கியின் கையிருப்பு 28 விழுக்காடாக உள்ளது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி தனது உபரி நிதியை அரசுக்கு வழங்க வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. மத்திய அரசின் கோரிக்கையால் அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்யும் அளவுக்கு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து ரிசர்வ் வங்கி எவ்வளவு உபரி நிதியை வைத்துக்கொள்ளலாம், எவ்வளவு உபரி நிதியை மத்திய அரசுக்கு வழங்கலாம் என்பது குறித்து முடிவு செய்வதற்காக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் பிமல் ஜலான் தலைமையில் கடந்த டிசம்பர் மாதம் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவில் மத்திய அரசு சார்பில் மத்திய நிதித்ததுறை செயலர் ராஜீவ்குமார், ரிசர்வ் வங்கி துணை ஆளுநர்கள் ராகேஷ் மோகன், விஷ்வநாதன், பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சுபாஷ் சந்திர கார்க், ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் பாரத் ஜோஷி மற்றும் சுதிர் மன்கட் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்தக் குழு தனது அறிக்கையை கடந்த 14-ம் தேதி ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கை குறித்து முடிவு செய்வதற்காக ரிசர்வ் வங்கியின் இயக்குநர்கள் குழு கூட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 2018-19-ம் நிதியாண்டின் உபரி நிதியான ஒரு லட்சத்து 23,000 கோடி ரூபாயும், திருத்தி அமைக்கப்பட்ட பொருளாதார முதலீட்டு வழிகாட்டுதலின் படி கண்டறியப்பட்ட உபரி நிதி 53,000 கோடி ரூபாயையும் மத்திய அரசுக்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி மத்திய அரசுக்கு தேவை ஏற்படும் நேரத்தில் பல தவணைகளாக வழங்கப்பட உள்ளது. ரிசர்வ் வங்கி ஜூலை முதல் ஜூன் வரையில் நிதியாண்டாக கணக்கிட்டு வரும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் உபரி நிதி மத்திய அரசுக்கு வழங்கப்படும். கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி பற்றாக்குறையை 3.3 விழுக்காட்டிற்குள் தக்கவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் ஒரு லட்சத்து 76 ,000 கோடி ரூபாய் நிதி மத்திய அரசுக்கு கிடைப்பது மிகப்பெரிய வருவாயாக பார்க்கப்படுகிறது.

மேலும் பார்க்க...  புலாசா மீனை ரூ.13,000 ஏலம் எடுத்த பெண்

Published by:Vaijayanthi S
First published:

Tags: Central govt, Minister Nirmala Seetharaman, RBI