ஒரு பொறுப்புள்ள நபராக பொருளாதார மந்தநிலை குறித்து பேசிய எனது கருத்தைத் திரும்பப் பெறுகிறேன் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ‘விடுமுறை தினமான அக்டோபர் 2-ம் தேதி வெளியான மூன்று இந்தி படங்கள் 120 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளன. நாட்டில், பொருளாதார மந்தநிலை இருந்தால் எப்படி இந்தப் படங்கள் இவ்வளவு பெரிய வசூலைக் குவிக்க முடியும்’ என்று பேசியிருந்தார்.
அவருடைய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பலரும் ரவிசங்கர் பிரசாத்தின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்தநிலையில், இந்த விவகாரம் குறித்து ரவிசங்கர் பிரசாத் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், ‘மூன்று படங்கள் ஒரே நாளில் 120 கோடி ரூபாய் வசூல் செய்தது குறித்து நான் பேசியது உண்மைத் தகவல். இந்தியாவின் சினிமா தலைநகரான மும்பையில் இருந்ததால் அதுகுறித்து பேசினேன்.
லட்சக்கணக்கானோருக்கு வேலையளிப்பதாலும், வரியின் மூலம் வருமானம் தருவதாலும் நம்முடைய சினிமா துறையை நினைத்து நாம் பெருமை கொள்கிறோம். நம்முடைய பொருளாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பாகவும் பல்வேறு வழிவகைகளை நான் எடுத்துக் கூறியிருந்தேன். நான், பேசிய முழு வீடியோகள் சமூக வலைதளங்களில் இருக்கின்றன. நான் பேசியதன் ஒரு பகுதி மட்டும் திரித்து கூறப்படுவது நினைத்து வருத்தப்படுகிறேன். ஒரு பொறுப்புள்ள நபராக, அந்த கருத்தை நான் திரும்பப் பெறுகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.
Also see:
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.