திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று ரத சப்தமி விழா நடக்கிறது. அதையொட்டி 7 வாகனங்களில் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சூரிய ஜெயந்தியை முன்னி்ட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் ரத சப்தமி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, காலை 5.30 மணிக்கு சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் மலையப்ப சுவாமி நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.
இதையடுத்து காலை 9 மணியில் இருந்து 10 மணிவரை சிறிய சேஷ வாகன ஊர்வலம், பகல் 11 மணியில் இருந்து மதியம் 12 மணிவரை கருட வாகன ஊர்வலம், மதியம் 1 மணியில் இருந்து 2 மணிவரை அனுமந்த வாகன ஊர்வலம், மதியம் 2 மணியில் இருந்து மாலை 3 மணிவரை சக்கர ஸ்நானம் நடக்கிறது.
அதைத்தொடர்ந்து மாலை 4 மணியில் இருந்து 5 மணிவரை கல்ப விருட்ச வாகன ஊர்வலம், மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை சர்வ பூபால வாகன ஊர்வலம், இரவு 8 மணியில் இருந்து 9 மணிவரை சந்திர பிரபை வாகன ஊர்வலம் நடக்கிறது. இத்துடன் வாகன ஊர்வலம் நிறைவடையும். ரத சப்தமி விழாவை முன்னிட்டு நான்கு மாட வீதிகளில் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா பரவல் காரணமாக 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் இலவச தரிசன டோக்கன் உள்ள பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.