பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே தொடர்ந்து கொண்டிருந்த எல்லை தாண்டிய துப்பாக்கிச்சூடு ஒரே ஒரு தொலைபேசி உரையாடல் மூலம் நிறுத்தப்பட்டுள்ளது என்றால் நம்ப முடிகிறதா? நேற்றிரவு முதல் அப்படி ஒரு தொலைபேசி அழைப்பின் காரணமாக காஷ்மீரில் தொடர்ந்து கொண்டிருந்த துப்பாக்கிச் சூடுக்கு ஓய்வு கிடைத்துள்ளது.
இந்தியாவுக்கும் அண்டை நாடான பாகிஸ்தானுக்குமான உரசல் என்பது ஆண்டு ஆண்டுகாலமாக தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு முடிவுற்ற பகையாகவே பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பலதரப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் போர் நிறுத்தத்தில் ஈடுபடுவதென்ற ஒரு உடன்படிக்கையை இந்தியா முன் மொழிந்தது. இதனை ஏற்ற இரு நாடுகளும் 2003ம் ஆண்டு முதல் 2016ல் நடைபெற்ற உரி தாக்குதல் வரை போர் நிறுத்தத்தை கடைபிடித்தன. 2016 முதல் 2018 வரை பல முறை இந்த போர் நிறுத்தம் மீறப்பட்டுள்ளது.
2018க்கு பிறகு எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. மெஷின் கன் மூலம் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் அன்றாடம் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு வந்தது.
இந்திய ராணுவத்துக்கும் , பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையில் நேரடி பேச்சுவார்த்தைக்காக பிரத்யேக ஹார்லைன் தொலைபேசி இணைப்பு ஒன்று இருந்து வருகிறது. அன்றாட நிகழ்வுகளுக்காக மேஜர் அந்தஸ்திலான அதிகாரி ஒருவர் எதிர் முனையில் பேசுவது வழக்கம். வாரம் ஒரு முறை பிரிகேடியர் அந்தஸ்திலான அதிகாரி ஒருவர் பேசுவார். ராணுவ இயக்குநர்கள் ஜெனரல் மட்டத்திலான பேச்சு என்பது மிகவும் அரிதாகவே நடைபெறும்.
இந்த நிலையில் ராணுவ இயக்குநர்கள் ஜெனரல் மட்டத்திலான பேச்சுவார்த்தை கடந்த திங்கள் (பிப் 22) அன்று நடைபெற்றுள்ளது. இதனையடுத்து நேற்றிரவு ( பிப் 24/25) முதல் இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை கடைபிடிப்பது என்று முடிவாகி உள்ளது.
பிப்ரவரி 24/25 நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து ஒப்பந்தங்கள், புரிந்துணர்வுகள் மற்றும் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் பிற அனைத்து பகுதிகளிலும் துப்பாக்கிச் சூடு நிறுத்தப்படுவதை இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர் என இரு தரப்பும் இணைந்து அறிவித்துள்ளனர். இதன் மூலம் எல்லைப் பகுதி வாசிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.
மத்திய அரசின் தகவில்படி கடந்த 3 ஆண்டுகளில் எல்லை பகுதிகளின் நடைபெற்ற 11,000 தனித்தனி போர் நிறுத்த விதிமீறல் சம்பவங்களின் மூலம் பொதுமக்கள், ராணுவ வீரர்கள் என 140க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும்போது, கடந்த ஓராண்டில் 5,133 விதிமீறல் சம்பவங்கள் நடைபெற்றதாகவும், இதில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 46 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jammu and Kashmir, Pakistan Army