'நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா' என்ற பிரபலமான பாடல் வரிகள் நாம் அறிந்ததே. இந்த பாடல் வரிகளுக்கு ஏற்ப அரியவகை லிப்ஸ்டிக் மலர் செடியை 100 ஆண்டுகளுக்குப் பின் அருணச்சாலப் பிரதேசத்தில் ஆய்வாளர்கள் மீண்டும் கண்டுபிடித்துள்ளனர். Aeschynanthus monetaria Dunn என்ற அறிவியல் பெயர் கொண்ட இந்த தாவரம் லிப்ஸ்டிக் செடி என பொதுவாக அழைக்கப்படுகிறது. பார்ப்பதற்கு லிப்ஸ்டிக் போலவே ஒல்லியாகவும் சிவப்பு நிற பூக்கள் மற்றும் தண்டுகளை இந்த செடி கொண்டுள்ளது.
1912ஆம் ஆண்டில் பிரிட்டனைச் சேர்ந்த ஐசக் ஹென்ரி புர்கில் என்ற தாவரவியல் அறிஞர் முதல் முதலாக இதே அருணாசலப் பிரதேசத்தில் இந்த தாவரத்தை கண்டுபிடித்தார். அதன் பின்னர் இந்த செடியை கண்டறிய தாவரவியலாளர்கள் பல ஆண்டுகளாக பிரயத்தனம் செய்து வந்தனர். இந்நிலையில், இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனம் இந்த தாவரத்தை நூறு ஆண்டுகள் கழித்து மீண்டும் அருணாச்சலப் பிரதேச மாநிலத்திலேயே கண்டறிந்துள்ளது. அம்மாநிலத்தின் அஞ்சா என்ற கிராமத்தில் இந்த தாவரம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
இந்திய தாவரவியல் ஆய்வு நிறுவனத்தை சேர்ந்த கிருஷ்ணா சோவ்லு என்பவரின் குழு இந்த லிப்ஸ்டிக் தாவரத்தை கடந்தாண்டு டிசம்பர் மாதம் மீண்டும் கண்டறிந்து இது தொடர்பாக ஆய்வு கட்டுரை எழுதி வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடுகையில், Aeschynanthus என்ற தாவரக் குழுவைச் சேர்ந்தது இந்த லிப்ஸ்டிக் தாவரம். இந்த குழுவில் 174 ரக தாவரங்கள் ஆசியாவில் உள்ளன. குறிப்பாக தெற்கு சீனா, மற்றும் இந்தியாவில் இது போன்ற தாவர ரகங்கள் அதிகம் காணப்படுகிறது. இந்தியாவில் மட்டும் 26 ரக தாவரங்கள் உள்ளது.
இதையும் படிங்க:
குடியரசுத் தலைவர் தேர்தல் தேதி எப்போது - தேர்தல் ஆணைையம் இன்று அறிவிப்பு
இந்த அரிய வகை லிப்ஸ்டிக் தாவரம் இதுவரை இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சீனாவின் திபெத் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவின் மிக வளமான பல்லுயிர் தன்மை கொண்ட மாநிலங்களில் அருணாச்சலப் பிரதேசம் ஒன்று. இங்கு மிகத் தீவிரமான ஆய்வுகளை நிபுணர்கள் மேற்கொள்ள வேண்டும் என்கிறார் இந்திய தாவரவியல் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கிருஷ்ணா சோவ்லு.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.