2 கோடி டூ 18 கோடி.. அயோத்தி ராமர் கோயில் நிலம் வாங்கியதில் ஊழல் - சமாஜ்வாதி கட்சி குற்றச்சாட்டு

மாதிரிப்படம்

ராமர் கோவிலுக்கு நிலம் என்ற பெயரில் ராமரின் பக்தர்கள் ஏமாற்றப்படுவதாகவும் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரனைக்கு உத்தரவிட வேண்டும் சமாஜ்வாதி கட்சி குற்றஞ்சாட்டுகிறது.

  • Share this:
    அயோத்தியில் ரூ. 2 கோடி மதிப்புள்ள நிலத்தை ரூ. 18 கோடிக்கு வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நிலம் வாங்கியதில் பலகோடி ரூபாய்-க்கு முறைகேடு நடந்துள்ளதாக சமாஜ்வாதி மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். இரண்டு ரியல் எஸ்டேட் அதிபர்கள் 2 கோடிக்கு வாங்கிய நிலத்தை சில நிமிடங்களில் 18 கோடிக்கு விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. அறக்கட்டளையில் இருக்கும் நபர்களுக்கு தெரிந்தே இது நடந்துள்ளது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவதற்காக மத்திய அரசால் கடந்த 2020-ம் ஆண்டு ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை கட்டமைக்கப்பட்டது. இதன் தலைவராக முன்னாள் அட்டர்னி ஜெனரல் பராசரம் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் சேர்ந்து மொத்தம் 15 உறுப்பினர்கள் இந்த அறக்கட்டளையில் உள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவு படி கோவில் கட்டப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் பணியும் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த பவன் பாண்டேவும், ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்ய சபா உறுப்பினருமான சஞ்சய் சிங் இருவரும் தனித்தனியாக செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினர். இருவரும் ஒரே குற்றச்சாட்டை முன்வைத்தனர். பவன் பாண்டே கூறுகையில், “உள்ளூர் பாஜக தலைவர்கள் மற்றும் சில அறக்கட்டளை உறுப்பினர்களின் ஒப்புதலுடன் இந்த நில மோசடி ஒப்பந்தம் நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டினார். அதற்கான சில ஆதாரங்களையும் அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் காட்டினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மார்ச் 18-ம் தேதி அந்த நிலம் 2 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதற்கான ஆவணங்களை காண்பித்தார். அதேநிலம் 10 நிமிட இடைவெளியில் 18.5 கோடிக்கு ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையால் வாங்கப்பட்டதற்கான ஆவணங்களையும் காட்டினார். 10 நிமிடத்தில் அந்த நிலத்தில் என்ன தங்கம் விளைந்துவிட்டதா எனக் கேள்வி எழுப்பினார். ஒப்பந்தம், பத்திரப்பதிவு ஆகிய இரண்டிற்குமே அறங்காவலர் அனில் மிஷ்ரா மற்றும் மேயர் ரிஷிகேஷ் உபாத்யாய சாட்சிகளாக இருந்திருக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டினார். 10 நிமிடத்தில் 16.5 கோடி ஊழல் செய்துள்ளனர். ராமர் கோவிலுக்கு நிலம் என்ற பெயரில் ராமரின் பக்தர்கள் ஏமாற்றப்படுவதாக கூறினார். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரனைக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.

    கோடிக்கனக்கான மக்கள் ராமர் கோவிலுக்காக நன்கொடை வழங்கி வருகின்றனர். தங்களுடைய சேமிப்புகளில் இருந்து நன்கொடை வழங்கி வருகின்றனர். அந்த மக்களின் பணத்தில் நீங்கள் இவ்வாறு செய்வது அவர்களை அவமதிப்பதாகும் என்றார்.

    ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் பேசுகையில், பகவான் ராமரின் பெயரில் ஊழல் செய்வார்கள் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் ஆவணங்கள் கோடிக்கணக்கில் மோசடி நடந்திருப்பதை காட்டுகின்றன. நிலத்தின் விலை, விநாடிக்கு சுமார் 5.5 லட்சம் ரூபாய் அதிகரித்துள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல உலகில் எந்த நிலமும் ஒரு நொடியில் இவ்வளவு விலை உயர்ந்திருக்க வாய்ப்பில்லை. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும்” எனக் கூறினார்.

    ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை செயலாளரும், விஷ்வ ஹிந்து பரிஷித் தலைவருமான சம்பத் ராயிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த, ‘ நூற்றாண்டுகளாக எங்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர். சிலர் மகாத்மா காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என்று குற்றஞ்சாட்டுகிறார்கள். இதுபோன்ற குற்றச்சாட்டுகள் குறித்து நாங்கள் கவலைப்படப்போவதில்லை. இந்த விவகாரத்தில் இப்போது கருத்து கூற விரும்பவில்லை. இதுதொடர்பான ஆவணங்களை பார்த்துவிட்டு பேசுகிறேன்” என்றார். இந்த விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: