டெல்லியில் பாஜக எம்.பி மர்ம மரணம்: தற்கொலையா?

எம்.பி ராம் ஸ்வரூப் ஷர்மா

கடந்த மாதம் மும்பையில், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி யூனியன் பிரதேச எம்.பி மோகன் தெல்கர் தற்கொலை செய்து உயிரிழந்த நிலையில் மேலும் ஒரு எம்.பி தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
டெல்லியில் பாஜக எம்.பி ஒருவர் தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்ததால் பாராளுமன்றத்தில் இன்று நடைபெறவிருந்த பாஜக நாடாளுமன்றக் கட்சி கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மக்களவை எம்.பியான ராம் ஸ்வரூப் ஷர்மா, டெல்லியில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மரணமடைந்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் வசித்து வரும் ராம் ஸ்வரூப் ஷர்மா இன்று காலை வெகு நேரமாகியும் தனது அறைக்கதவை திறக்காத நிலையில் அவரின் தனி உதவியாளர் ஷர்மாவின் அறையை தட்டியிருக்கிறார். பல முறை தட்டியும் அறைக்கதவை அவர் திறக்காததால் காலை 7.45 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட அவருடைய உதவியாளர் இது தொடர்பாக தகவல் தெரிவித்தார்.

காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்ற போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எம்.பி ராம் ஸ்வரூப் ஷர்மா


இது தொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், எம்.பியின் அறைக்கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலையாக இருக்கும் என கருதப்படுகிறது. இருப்பினும், கடிதம் ஏதும் கைப்பற்றப்படவில்லை, உடற்கூராய்வு பரிசோதனையின் அறிக்கை கிடைத்த பிறகே அவரின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என தெரிவித்தனர். ராம் ஸ்வரூப் ஷர்மா கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துவந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே எம்.பி ராம் ஸ்வரூப் ஷர்மாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணுவதில் அர்ப்பணிப்பு கொண்ட தலைவர். சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக அவர் அயராது உழைத்தார். அவரது அகால மற்றும் துரதிர்ஷ்டவசமான மறைவால் வேதனையில் தவிக்கிறேன். இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் ஆதரவாளர்களுடனும் உள்ளன. ஓம் சாந்தி.” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.62 வயதாகும் ராம் ஸ்வரூப் ஷர்மா, ஹிமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் இருந்து 2014 மற்றும் 2019 என இருமுறை எம்..பியாக வெற்றி பெற்றவர். பாராளுமன்றத்தின் வெளியுறவு கமிட்டியிலும் அங்கம் வகித்து வந்தார். அவருக்கு ஒரு மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.

ஹிமாச்சல் பிரதேச முதல்வர் ஜெய்ராக் தாக்கூரும் ராம் ஸ்வரூப் ஷர்மாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் மும்பையில், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி யூனியன் பிரதேச எம்.பி மோகன் தெல்கர் தற்கொலை செய்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: