கர்நாடக மாநில மசூதிகளில் பாங்கு ஒலிப்பதற்கு போட்டியாக ஸ்ரீராம் சேனா அமைப்பினர் கோயில்களில் ஒலிபெருக்கி மூலம் அனுமன் சாலிசா பாடலை ஒலிபரப்பி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களின் ஐந்து வேளை தொழுகைக்காக மசூதிகளில் 'அஸான்' எனும் பாங்கு முழக்கம் ஒலிபெருக்கிகளில் ஒலிக்கும். இந்த பாங்கு ஒலியை ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்புவதற்கு மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் வலதுசாரி மற்றும் இந்துத்துவ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து பிரச்சனை செய்துவருகின்றனர்.
மசூதிகளில் அதிக சத்தம் எழுப்பும் ஒலிப்பெருக்கிகளை அகற்ற வேண்டும் என்று மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே முதலில் எதிர்ப்பு குரல் எழுப்பிய நிலையில், அதை பின்பற்றி ஸ்ரீ ராம் சேனா அமைப்பினரும் கர்நாடகாவில் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று கர்நாடக கோயில்களில் ஒலிபெருக்கிகளில் அனுமான் பாடல்களை பாடி ஒலிபரப்பி வருகின்றனர். ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக், மைசூரில் உள்ள அனுமன் கோயிலில் நடைபெற்ற பஜனையில் பங்கேற்றார். ஒரு சில இடங்களில் அதிகாலை முதலே மசூதி அருகே அனுமன் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. இது போன்ற சம்பவம் பெங்களூரு, மைசூரு, மன்டியா, பெல்காம், தார்வாட், கலாபுர்கி ஆகிய பகுதிகளில் நடைபெற்றதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. இதில் ஈடுபட்ட ஸ்ரீ ராம் சேனா அமைப்பைச் சேர்ந்த பலரை காவல்துறை கைது செய்துள்ளது.
அத்துடன் பெங்களூருவில் ஸ்ரீராம் சேனா தொண்டர்கள் கோயிலுக்குச் செல்வதற்கு முன்பே காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதால் மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்க ஆங்காங்கே காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:
தக்காளிக்கும் காய்ச்சலுக்கும் சம்பந்தமா?
இது தொடர்பாக ராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் 'இது ஒரு நாளுக்கான அடையாளப் போராட்டம் அல்ல. உச்ச நீதிமன்ற உத்தரவின் படி விதிமுறைகளை பின்பற்றாத மசூதிகளுக்கு எதிராக இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும். அத்துடன் இந்த மசூதிகள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவுள்ளோம்' என கூறியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.