Home /News /national /

PFI | பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை? மத்திய அரசு தீவிரம்

PFI | பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை? மத்திய அரசு தீவிரம்

PFI

PFI

Popular Front of India (PFI): சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு)ச் சட்டம், 1967-ன் கீழ் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை அமைப்பு தடைசெய்யப் பட இருப்பதாக தெரியவந்துள்ளது

  ராம நவமியையொட்டி ஏற்பட்ட மதக் கலவரங்களை அடுத்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்ய மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967-ன் கீழ் இந்த அமைப்பு தடைசெய்யப்பட இருப்பதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து அரசு வட்டாரங்கள் தெரிவிக்கையில், " ராம நவமியையொட்டி  நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதக் கலவரங்கள் ஏற்பட்டது. சட்டத்தின்படி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா  மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அந்த அமைப்பை தடை செய்வதற்கான நடவடிக்கைகள்  தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த, அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த வாரத்திற்குக்குள் வெளியாகும்" என்று தெரிவித்தார்.

  ஆண்டுதோறும், ஏப்ரல் 9ம் தேதி ராமரின் பிறந்த நாள் ராம நவமி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு, கொண்டாட்டத்தின் போது உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், மேற்குவங்கம், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜார்க்கண்ட், கார்நாடகா ஆகிய மாநிலங்களில் மத ரீதியிலான கலவரங்கள் உருவானது. இதில் , 2 பேர் உயிரிழந்தனர், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த கலவரத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீது கூறப்படுகிறது.

  பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா:

  தமிழகம், கேரளம், கர்நாடக ஆகிய மாநிலங்களில் சமுக நீதியை முன்னிறுத்தி செயல்பட்ட முன்னணி அமைப்புகளான மனித நீதிபாசறை, நேசனல் டெவலப்மென்ட் ஃப்ரண்ட் மற்றும் கர்நாடக ஃபர்ம் பார் டிகினிடி ஆகிய அமைப்புகள் 2007ம் ஆண்டு ஒத்த கருத்துகளுடன் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற ஒற்றைக் குடையின் கீழ் ஒன்றாக செயல்பட துவங்கியதாக அந்த அமைப்பு தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

  இந்த அமைப்பு செயல்வீரர்களின் (Cadre Based Movement) கட்டமைப்புடன் இயங்குகிறது. நவீன சமூக இயக்கமாக பல மாநிலங்களில் அனைத்து சமுதாய மக்களுக்கும் சுதந்திரம், நீதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யவே இம்மக்கள் இயக்கம் போராடுவாதாக தெரிவிக்கிறது.

  சர்ச்சைகள்:

  கடந்த 2010ம் ஆண்டு கேரள மாநிலம் மூவாத்துபுழாவில் பேராசிரியர் டி.ஜே ஜோசப் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்ட வழக்கில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மீது புகார் கூறப்பட்டது. அம்மாநிலத்தில் வேறு சில மோதல்களின் பின்னணியிலும் இந்த அமைப்பின் செயல்பாடுகள் இருப்பதாக கேரள அரசு தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தது. இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு இந்த அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கேரளா அரசு முன்னெடுத்தது.

  இந்த அமைப்பின் அரசியல் பிரிவாக இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்.டி.பி.ஐ)  செயல்படுகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த கட்சியானது, இசுலாமியர், தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காக செயல்பட்டு வருவதாக தெரிவிக்கிறது.

  2019 குடியுரிமைத் திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தனது எதிர்ப்புக்  குரலை இந்த அமைப்பு தீவிரமாக பதிவு செய்தது. இந்த சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோதல் போக்குகள்  ஏற்பட்டன. குறிப்பாக, டெல்லி,உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில்  மதக் கலவரங்களாக உருவெடுத்தன. அதனைத் தொடர்ந்து, 2020 ஹத்ராஸ் கூட்டு கற்பழிப்பு மற்றும் கொலை (2020 Hathras gang rape and murder) சம்பவத்தில்  வன்முறையான சூழல்களை  இந்த அமைப்பு உருவாக்கியதாக உத்தர பிரதேச அரசு குற்றஞ்சாட்டியிருந்தது.

  இதனையடுத்து, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு தடை விதிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தர பிரதேச அரசு அறிக்கை சமர்ப்பித்தது.

  2020 ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை (2020 Hathras gang rape and murder) என்பது இந்திய நாட்டின் உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள ஹத்ராஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமத்தில் நடந்த பாலியல் வழக்காகும். இந்த சம்பவத்தில் 19 வயதுடைய ஏழை விவசாயப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். முற்பட்ட வகுப்பினரைச் சேர்ந்த  நான்கு பேர் கூட்டாகச் சேர்ந்து கொடூரமாக கூட்டு பலாத்காரம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. அப்பெண் காயங்களுடன் அலிகரில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் 20 செப்டம்பர் 2020 அன்று மரணமடைந்தார்.  குடும்பத்தின் அனுமதியின்றி இரவோடு இரவாக உ.பி காவல்துறையினர்  மறைந்த பெண்ணை தகனம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
  இந்த கூட்டு பாலியல் வழக்கு  தொடர்பாக விசாரிக்க சென்ற கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பான் என்பவரை உத்தரபிரதேச காவல்துறையினர் கைது செய்தனர். சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ்  தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குற்றப்பத்திரிகையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் சித்திக் நெருங்கிய தொடர்பில் இருந்து வருவதாகவும் கூறப்பட்டது.

  2008 பெங்களூர் தொடர் குண்டுவெடிப்புகள், கேரளா  ஹாதியா வழக்கு (கேரளா அகிலா வழக்கு) போன்ற இதர வழக்கிலும் இந்த அமைப்பு மீது புகார்கள் கூறப்பட்டன.
  Published by:Salanraj R
  First published:

  Tags: Central government, Muslim

  அடுத்த செய்தி