2023ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் தாக்கலுக்குப் பின் முதல்கட்ட அமர்வு பிப்ரவரி 13ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட அமர்வு நேற்று தொடங்கியது.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இந்தியா குறித்து பிரிட்டனில் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்பிக்கள் நேற்று மேற்கொண்ட அமளியில் அவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் முடங்கின. இந்நிலையில் இன்று காலை அவை நடவடிக்கை தொடங்கும் முன்னர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக ஆலோசனை நடத்தின. பிரதமர் நரேந்திர மோடியும் அமைச்சர்கள் பியூஷ் கோயல், பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், காலை மக்களையும் மாநிலங்களவையும் கூடின.
மக்களவை தொடங்கிய உடனே ஆளும் பாஜக எம்பிக்களும், எதிர்க்கட்சிகளும் கூச்சல் அமளியில் ஈடுபடத் தொடங்கினர். ராகுல் தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும், அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என எதிர்க்கட்சிகளும் கோஷம் எழுப்பி அமளி செய்தன. இதனால் அவை நடவடிக்கையை தொடர முடியாமல் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நண்பகல் 2 மணி வரை அவையை ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க: மூத்த குடிமக்களுக்கு ரயில்களில் மீண்டும் கட்டண சலுகை.. மத்திய அரசுக்கு பரிந்துரை..!
மாநிலங்களவை கூடியவுடன் ஆஸ்கர் விருது வென்ற The Elephant whisperers மற்றும் RRR படக்குழுவினருக்கு மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் மாநிலங்களவை உறுப்பினர்கள் சார்பாக பாராட்டு தெரிவித்தார். இந்திய கலைஞர்களின் திறமை, படைப்பாற்றல், அர்ப்பணிப்பு ஆகியவற்றை இந்த சாதனை பிரதிபலிப்பதாக அவர் கூறினார்.
தொடர்ந்து மாநிலங்களவையிலும் ராகுல் காந்தி, அதானி விவகாரங்கள் அமளியை கிளப்ப, அவை நண்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மேலும், அதானி விவகாரம் தொடர்பாக நடவடிக்கை வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தி காங்கிரஸ் எம்பிக்கள் நாடாளுமன்ற வாயிலில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Lok sabha, Om Birla, Parliament Session, Rajya Sabha