முகப்பு /செய்தி /இந்தியா / 4 மாநிலங்களில் இன்று மாநிலங்களவைத் தேர்தல்.. குதிரை பேரத்தை தடுக்க எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் தங்க வைப்பு

4 மாநிலங்களில் இன்று மாநிலங்களவைத் தேர்தல்.. குதிரை பேரத்தை தடுக்க எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் தங்க வைப்பு

ராஜ்ய சபா

ராஜ்ய சபா

Rajya Sabha election : மாநிலங்களவைத் தேர்தலில் தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் விலை போய்விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்தி வரும் கட்சிகள், அவர்களை தனியிடத்தில் வைத்து பாதுகாத்து வருகின்றன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் இன்று மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், எம்எல்ஏ-கள் அணி தாவ வாய்ப்பு இருப்பதால் அவர்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப் பட்டுள்ளனர்.

கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் மாநிலங்களவைத் தேர்தலில் 16 இடங்களுக்கு போட்டி நிலவுவதால், இன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள 6 இடங்களுக்கு 7 பேர் போட்டியிடுவதால் கடந்த 22 ஆண்டுகளாக தேர்தல் நடத்த அவசியம் ஏற்படாத நிலையில் இம்முறை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

தேர்தலில் ஒரு வேட்பாளர் வெற்றி பெற 42 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள் உள்ளனர். சிவசேனாவுக்கு 55, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரசுக்கு 42 என எம்எல்ஏக்களின் எண்ணிக்கை உள்ளது. இது தவிர சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 29 எம்எல்ஏக்கள் உள்ளனர். பாஜகவிற்கு இரண்டு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வான பின்னர், 29 எம்.எல்.ஏ.க்கள் மீதமிருப்பர். எனவே 3ஆவது இடத்தை சிறிய கட்சிகளின் ஆதரவுடன் வெல்ல பாஜக வியூகம் வகுத்துள்ளது.

இதேபோல காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா தலா ஒரு எம்.பி.க்கள் பெற்ற பிறகு அந்த கூட்டணியில் 27 எம்எல்ஏக்கள் உள்ளனர். எனவே அந்த அணியும் சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் 4ஆவது இடத்தை வெல்ல திட்டமிட்டுள்ளது.

தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் விலை போய்விடகூடாது என்பதில் கவனம் செலுத்தி வரும் கட்சிகள், அவர்களை தனியிடத்தில் வைத்து பொத்தி பொத்தி பார்த்துக் கொண்டன. சிவசேனா கட்சியினர் மும்பையில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தானில், பாஜக ஆதரவுடன் தேர்தலில் போட்டியிடும் ஊடக முதலாளி, சுபாஷ் சந்திரா தனக்கு ஏற்கெனவே 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ.கள் வாக்களிக்க உள்ளதாகவும், மேலும் 8 பேர் கட்சியை மீறி வாக்களிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார். குதிரை பேரத்தை தடுக்க காங்கிரஸ் கட்சி தனது எம்.எல்.ஏ.க்களை கடந்த 2ஆம் தேதி முதல் ஜெய்பூரில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

கர்நாடகாவில் மொத்தமுள்ள 4 இடங்களுக்கு 6 பேர் போட்டியிடுகின்றனர். 4வது உறுப்பினருக்கு வெற்றி பெற வாய்ப்பில்லாத போதும் பாஜக, காங்கிரஸ், ஜனதா தளம் ஆகிய 3 கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

ஹரியானாவில் இரு இடங்களுக்குத் தேர்தல் நடக்கிறது. 31 வாக்குகள் இருந்தால் வெற்றி என்ற நிலையில் 40 எம்.எல்.ஏ.களை பெற்றுள்ள பாஜகவுக்கு ஒரு எம்.பி பதவி உறுதியாகியுள்ளது. இரண்டாவது இடத்துக்கு தேவையான 31 எம்.எல்.ஏ.களை தன் வசம் வைத்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கனை களமிறக்கியுள்ளது. பதிலுக்கு பாஜக ஆதரவாளரான பத்திரிகை அதிபர் கா்த்திகேய சர்மா போட்டியிடுவதால் காங்கிரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பாஜக கூட்டணிக் கட்சியான ஜேஜபி வசம் 10 எம்எல்ஏ-க்கள் இருப்பதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இதனிடையே, கட்சி தாவிவிடக் கூடாது என்பதற்காக சத்தீஸ்கர் மாநிலம் அழைத்துச் செல்லப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.கள் நேற்றிரவு டெல்லி வந்தனர். அவர்கள், சண்டிகரில் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மொத்தம் 245 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் பாஜகவிற்கு 100 உறுப்பினர்கள் உள்ளனர். 30 வருடங்களில் 100 உறுப்பினர்களைக் கொண்ட ஒரே கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. 1990-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி மாநிலங்களவையில் 108 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது.

சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதால், மாநிலங்களவையில் பாஜகவின் பலம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Must Read : ராகுல் காந்திக்கு சம்மன்; நாடு முழுவதும் அமலாக்கத்துறையைக் கண்டித்து போராட்டம்- காங்கிரஸ் அறிவிப்பு

இதனிடையே தேர்தல் நடைபெறும் ஹரியானா, கர்நாடகா உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு தேர்தல் சிறப்பு பார்வையாளர்களை நியமித்துள்ள தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவை வீடியோவில் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

First published:

Tags: Election Commission, Rajya Sabha Election