Home /News /national /

Rajiv Gandhi: ராஜீவ் காந்தி பற்றி அதிகம் தெரியாத உண்மைகள்!

Rajiv Gandhi: ராஜீவ் காந்தி பற்றி அதிகம் தெரியாத உண்மைகள்!

Rajiv Gandhi: ராஜீவ் காந்தி

Rajiv Gandhi: ராஜீவ் காந்தி

ராஜீவ் காந்தி அரசியலுக்கு வரவேண்டும் என்ற இந்திராவின் வற்புறுத்தலுக்கு காரணமாக இருந்தவர் பத்ரிநாத்தை சேர்ந்த ஒரு துறவி என்பது பலருக்கு தெரியாத ஒன்று.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
இந்தியாவின் 6வது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி தனது தாய் இந்திரா காந்தியை போலவே படுகொலை செய்யப்பட்டு உயிர் துறந்தார். அவர் 1991ம் ஆண்டு இதே தினத்தில் (மே 21) தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகை தந்த போது தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு பலி ஆனார்.

ராஜீவ் காந்தியின் 31வது தினத்தில் அவரைப்பற்றி அறியாத சில உண்மைகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

ராஜீவ் காந்தி மிகப்பெரிய அரசியல் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தன்னுடைய தாய் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போதிலும் அவர் அரசியலில் இருந்து விலகியே இருந்தார் என்பது அனைவராலும் அறியப்பட்டது தான். அதே போல அவர் விமானியாக பணியாற்றியதும் பலராலும் அறியப்பட்ட ஒன்று.

எஞ்சினியர் டூ விமானி:

ஆனால் அவர் விமானியாவதற்கு முன்னர் பொறியியல் படித்தார் என்பது அதிகம் அறியப்படாத ஒன்று. லண்டன் சென்ற ராஜீவ் காந்தி அங்கு தன்னுடைய இளநிலை கல்வியை (A-levels) படித்தார், பின்னர் கேம்பிரிட்ஜில் உள்ள ட்ரினிட்டி கல்லூரியில் சேர்ந்து பொறியியல் பட்டப் படிப்பில் சேர்ந்தார். இருப்பினும் 3 ஆண்டுகள் அங்கு படித்தும் அவர் பட்டம் பெறவில்லை.

அதற்கடுத்து லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் இயந்திர பொறியியல் (மெக்கானிக்கல்) படிப்பில் சேர்ந்தார். ஆனால் அந்த படிப்பிலும் அவர் பட்டம் பெறவில்லை. மனப்பாடம் செய்து தேர்வு எழுதுவதில் தனக்கு விருப்பம் இல்லை என்று பின்னாளில் அவர் விளக்கம் தந்தார்.

பின்னர் இந்தியா வந்த ராஜீவ் காந்தி டெல்லியில் உள்ள ஃபிளையிங் கிளப்பில் சேர்ந்து விமானி பயிற்சி பெற்றார். இதன் காரணமாக 1970ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸில் அவர் விமானியாக பணிக்கு சேர்ந்தார்.

விமானியாகும் ஆசை அவரது தாத்தாவும் முன்னாள் பிரதமருமான ஜவஹர்லால் நேருவிடம் இருந்து தோன்றியதாகவும் ராஜீவ் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். முதல் முறையாக நேரு அவரை கிளைடிங் கிளப் ஒன்றிற்கு அழைத்துச் சென்ற போது பறக்கும் ஆசை தனக்கு தோன்றியதாகவும், மிகவும் சுதந்திரமாக இருக்க முடியும் என்பதால் எனக்கு அந்த ஆசை வேரூண்றியதாகவும் குறிப்பிட்டார்.

ராஜீவ் காந்தி


புகைப்பட கலைஞர்:

இந்தியாவின் குறைந்து வயதுடைய பிரதமர் ராஜீவ் காந்தி என அறியப்பட்ட பலரும், ராஜீவ் ஒரு கைதேர்ந்த புகைப்பட கலைஞர் என்பது வெகு சிலரே அறிந்த தகவல். புகைப்படம் எடுப்பதில் நிபுணத்துவமும், அக்காலத்திய நவீன தொழில்நுட்பங்களையும் அவர் அறிந்து வைத்திருந்தார். புகைப்படங்கள் குறித்த புத்தகம் ஒன்றை எழுதுமாறு ஒரு புத்தக வெளியீட்டாளர் தன்னை பல முறை வற்புறுத்தியதாகவும் அவர் மறுத்துவிட்டதாகவும் சோனியா காந்தியிடம் ராஜீவ் தெரிவித்திருந்தார்.

ராஜீவ் கடந்த 40 ஆண்டுகளில் எடுத்திருந்த புகைப்படங்களை தொகுத்து “Rajiv’s world: Photographs by Rajiv Gandhi” என்ற புத்தகத்தை அவருடைய மறைவுக்கு பிறகு 1995ம் ஆண்டு சோனியா காந்தி வெளியிட்டார். அந்த புத்தகம் ஒரு சுயசரிதைக்கு நிகரானது.

மிஸ்டர் கிளீன்:

1980களின் தொடக்கத்தில் அரசியலில் நுழைந்த போது அவர் அரசியலுக்கு ஒரு வேற்று கிரகவாசி என்றே ராஜீவ் கருதப்பட்டார். 1984ல் அவர் பிரதமர் ஆவதற்கு முன்னதாக 40 வயது கூட நிரம்பவில்லை ராஜீவிற்கு. அவருடைய இளமையும், தோற்ற பொலிவும், குணநலன்களாலும் எதிர்கட்சிகளால் கூட விமர்சிக்க முடியாத நிலைமையை ஏற்படுத்தியது. இந்த நாட்டிலிருந்து ஊழலை ஒழிப்பேன் என முழங்கிய ராஜீவ் காந்திக்கு மிஸ்டர் கிளீன் என்ற இமேஜ் அப்போது கிடைத்தது.

இருப்பினும் 1989ல் அவருடைய ஆட்சி நிறைவாகும் சமயம் போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் போன்ற சில ஊழல்களில் ராஜீவ் காந்தியின் பேரும் அடிபட்டதால் மிஸ்டர் கிளீன் என்ற இமேஜ் சுக்குநூறாக நொறுங்கிப் போனது.

அருமையான ஓட்டுனர்:

விமானியான ராஜீவ் காந்தி கார் ஓட்டுவதிலும் வல்லவர். பெரும்பாலும் பிரச்சார கூட்டங்களுக்கு அவர் ஓட்டுநரை வைத்துக் கொள்ளாமல் அவராகவே காரை ஓட்டுவார். மேற்குவங்க மாநிலத்திற்கு 1986ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற போது ராஜீவ் அவராகவே கார் ஓட்டினார். அப்போது அவருடன் காரில் பத்ரிகையாளர் சுமன் சட்டோபத்யாய் என்பவரும் பயணித்தார். அந்த பயண அனுபவம் குறித்து சுமன் அவருடைய “My date with history: A Memoir,” என்ற புத்தகத்தில் இவ்வாறு கூறியிருக்கிறார். “ராஜீவ் காந்தி காரை அசுர வேகத்தில் ஒட்டினார். அவருடைய கார் இயக்கும் திறமை அபாரமாக இருந்தது. அவருடைய காரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் பாதுகாப்பு வாகனங்கள் திணறின. அருகில் கூட வர முடியாமல் அவர்கள் படாதபாடுபட்டனர் என அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜீவை அரசியலில் சேர வலியுறுத்திய துறவி:

ராஜீவ் காந்தி அரசியலில் நுழைவதில் துளியும் விருப்பம் இல்லாமல் இருந்தவர் என்பது பலராலும் அறியப்பட்டதே. ஆனால் அவருடைய சகோதரர் சஞ்சய் காந்தி விமான விபத்தில் பலியான பின்னர் இந்திரா காந்தியின் வற்புறுத்தலால் தான் ராஜீவ் அரசியலில் நுழைந்தார்.

இருப்பினும் இந்திராவின் வற்புறுத்தலுக்கு காரணமாக இருந்தவர் பத்ரிநாத்தை சேர்ந்த ஒரு துறவி என்பது பலருக்கு தெரியாத ஒன்று.

சஞ்சய் காந்தியின் மறைவையடுத்து இரங்கல் தெரிவிப்பதற்காக பத்ரிநாத்தின் ஜகத்குரு சங்கராச்சார்யா சுவாமி ஸ்ரீ ஸ்வரூபாநந்தா சோனியாவை சந்தித்தார். அப்போது ராஜீவ் காந்தி நீண்ட நாட்களுக்கு விமானங்கள் இயக்குவது சரியாக இருக்காது என தெரிவித்திருக்கிறார். அப்போது ராஜீவ் காந்தி விமானி வேலை பார்க்காவிட்டால் அவரால் குடும்பத்தை பராமரிப்பது கடினம் என இந்திரா கூறியபோது, ராஜீவ் அரசியலுக்கு வர வேண்டும். கடவுளுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார். என்னுடைய நம்பிக்கை இது, ராஜீவ் காந்தி நாட்டு மக்களின் சேவைக்காக அரசியலில் ஈடுபட வேண்டும் என தெரிவித்ததாக தகவல்கள் உள்ளன.

Read More:   ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட தினம் இன்று: ஒரு குட்டி பிளாஷ்பேக்!

1984ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி இந்திரா காந்தி அவரது பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து அன்றைய தினமே இந்தியாவின் பிரதமராக நியமனம் செய்யப்படுகிறார் ராஜீவ். 1989ம் ஆண்டு வரை பிரதமராக நீடித்த காலத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானதால் 1989 தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முடியாமல் போனது.

இதற்கிடையே தமிழர் பிரச்னையை தீர்ப்பதற்காக இந்தியாவின் அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்பி வைத்ததன் மூலம் விடுதலை புலிகள் அமைப்பின் பகையை சம்பாதித்து வைத்திருந்தார் ராஜீவ் காந்தி.

1991ம் ஆண்டு தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகை தந்தார் ராஜீவ் காந்தி. சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மேடையை நோக்கி நடந்து வந்த போது விடுதலை புலிகளின் தற்கொலை அமைப்பை சேர்ந்த பெண் ஒருவர் ராஜீவின் காலில் விழுந்து ஆசி வாங்குவது போல நடித்து தன்னிடம் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். இந்த கோர சம்பவத்தில் ராஜீவ் காந்தி உட்பட 14 பேர் உடல் சிதறி பலியானார்கள்.
Published by:Arun
First published:

Tags: Congress, Rahul gandhi, Rajiv gandhi, Rajiv Gandhi Murder case, Sonia Gandhi

அடுத்த செய்தி