5 States Assembly elections 2018 | ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலத்திலும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11-ல் நடைபெறுகிறது.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்த நிலையில்,5 மாநில சட்டமன்ற தேர்தலின் இறுதிக்கட்டமாக, ராஜஸ்தான் மற்றும் தெலங்கானாவில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.
அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில், 5 மாநில தேர்தல் முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால், அதற்கான முன்னோட்டமாக கருதி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன.
இப்பிரசாரத்தில் பிரதமர் மோடியும், பாஜக-வினரும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்காலத்தில் திட்டங்களின் தோல்விகளையும், பாஜக திட்டங்களின் வெற்றிகளையும் பற்றி பேசினர். ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், ரபேல் விமான ஊழல், விவசாயிகள் தற்கொலை, புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்காதது போன்ற பிரச்னைகளை பட்டியலிட்டு பாஜக மீது குற்றச்சாட்டு கூறினர்.
தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சிகள் சரமாரியாக புகார் கூறின.
இதில் 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு, 199 தொகுதிகளுக்கு மட்டும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ராம்கார் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் மரணம் அடைந்ததால், அங்கு வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானை பொருத்தவரை, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையேதான் இருமுனைப்போட்டி நிலவுகிறது. இங்கு 52, 000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தெலங்கானாவில், டிஆர்எஸ், பாஜக மற்றும் காங்- தெலுங்கு தேசம் கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. 119 தொகுதிகளில், 1,800 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 2 கோடியே 80 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை ஐந்து மணிக்கு நிறைவு பெறுகிறது. காலை முதலே ஆர்வமாக பொதுமக்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Also see... மேகதாது அணை: எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் தீர்மனாம்
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.