ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு ரவுடி கும்பல்களுக்கிடையே நடு ரோட்டில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி ஒருவர் உயிரிழந்தார்.
ராஜஸ்தான் மாநிலம் சிகார் நகரில் தாராசந்த் காட்ஸ்வாரா என்பவர் தன் மகளை கோச்சிங் சென்டரில் சேர்த்து விடுவதற்காக அழைத்துச் சென்றுள்ளார். அப்போது ரவுடி கும்பல் ஒன்று திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளது. இதில் தாராசந்த் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். சிறிது நேரத்தில் மகளின் கண்முன்னால் தாராசந்த் உயிரிழந்தார். இதே துப்பாக்கிச் சூட்டில் ராஜூ தேத் என்ற பிரபல ரவுடியும் உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அந்தப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்கிளில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று இந்த துப்பாக்கிச் கூட்டை நடத்தியது தெரியவந்துள்ளது. பிரபல ரவுடியான ராஜூ தேத்-ஐ குறிவைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், முன்பகை காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடைபெற்ற பகுதியில் ஏராளமான கோச்சிங் சென்டர்கள் செயல்படுகின்றன.
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ராஜூ தேத்தின் சகோதரரும் சிகார் நகர் பிப்ராலி சாலையில் ஒரு கோச்சிங் சென்டர் நடத்தி வருகிறார். அங்கு சென்ற ராஜூ மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அப்பாவியான தாராசந்த் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடைபெற்ற சிறிது நேரத்தில் ரோஹித் கோடாரா என்பவர் பழிக்குப் பழியாக இந்த கொலை நடைபெற்றுள்ளதாக முகநூலில் பதிவிட்டுள்ளார். தன்னை லாரன்ஸ் பிஸ்னோய் கூட்டாளி என அறிமுகப்படுத்திக் கொண்ட ரோஹித், ஆனந்த்பால்சிங் மற்றும் பல்பீர் பனூடா ஆகியோரின் கொலைக்கு பழிவாங்கவே ராஜூவை சுட்டுக் கொன்றதாக முகநூலில் பதிவிட்டுள்ளார்.
ராஜூ தேத் கொலை செய்யப்பட்டதை கண்டித்து சிகார் நகரில் கடையடைப்பிற்கு அவரது ஆதரவாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். அதோடு கொலையாளிகளை உடனடியாக கைது செய்யவும் வலிறுயுத்தியுள்ளனர். இதையடுத்து காவல்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொலையாளிகளின் அடையாளங்களை மாநிலம் முழுவதும் உள்ள காவல்நிலையங்களுக்கு அனுப்பி தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தியுள்ளனர். மேலும் மாநிலம் முழுவதும் உள்ள போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
பட்டப்பகலில், நடுரோடடில் ரவுடி கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தி இரண்டு பேர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.