முகப்பு /செய்தி /இந்தியா / உதய்பூர் படுகொலை - உயிரிழந்த கண்ணையா லால் குடும்பத்திற்கு ராஜஸ்தான் முதல்வர் நேரில் சென்று ஆறுதல்

உதய்பூர் படுகொலை - உயிரிழந்த கண்ணையா லால் குடும்பத்திற்கு ராஜஸ்தான் முதல்வர் நேரில் சென்று ஆறுதல்

முதலமைச்சர் அசோக் கெலாட் நேரில் ஆறுதல்

முதலமைச்சர் அசோக் கெலாட் நேரில் ஆறுதல்

இந்த கொலை வழக்கு விசாரணை ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என முதலமைச்சர் கெலாட் கோரிக்கை வைத்துள்ளார்.

  • Last Updated :

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் படுகொலை செய்யப்பட்ட தையல்காரர் கண்ணையா லால்லின் குடும்பத்தினரை மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அத்துடன் உயிரிழந்த கண்ணையா லால்லின் குடும்பத்தினருக்கு ரூ.51 லட்சம் இழப்பீடு தந்துள்ளார்.

இந்த சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் அசோக் கெலாட், ஒரு மாத காலத்திற்குள் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பேசி கோரிக்கை வைக்கவுள்ளேன். இந்த கொடூர கொலை மாநிலத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியுள்ளது. குற்றவாளிகளை விரைந்து பிடித்து இவர்களுக்கு சர்வதேச தொடர்பு உள்ளது என்பதை கண்டறிந்த மாநில காவல்துறைக்கு பாராட்டு என்றார்.

முதலமைச்சர் சந்திப்பு குறித்து உயிரிழந்த கண்ணையா லால்லின் மகன் கூறுகையில், இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் உறுதியளித்துள்ளார். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டவர்களுக்கு நிச்சயம் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்றார். ராஜஸ்தானில் நுபுர் சர்மாவை ஆதரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டவர் தலை துண்டித்து கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டதுடன், இணையதள சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ஆங்கிலத் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் முகமது நபி குறித்த சர்ச்சை கருத்தை பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பில் இருந்து கண்டன குரல்கள் எழுந்தன.

சமூக வலைதளங்களில் நுபுர் சர்மாவின் கருத்தை ஆதரித்தும் எதிர்த்தும் கருத்துகள் பதிவிடப்பட்டு வந்தன, இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நுபுர் சர்மாவின் கருத்தை ஆதரித்து பதிவிட்ட 40 வயது தையற்கலைஞர் கன்னையா லாலின் கடைக்கு வந்த இருவர் அவரின் தலையை துண்டித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அது தொடர்பான வீடியோவையும் அவர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தனர். அதில் ஒருவர் வெட்ட மற்றொருவர் அதை மொபைலில் வீடியோ பதிவு செய்வதும் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில் கொலை செய்ததை ஒப்புக் கொள்ளும் அந்த இருவரும் அப்போது பயன்படுத்திய கத்தியையும் பதிவிட்டதுடன் பிரதமர் மோடிக்கும் மிரட்டல் விடுத்திருந்தனர்.

இதையும் படிங்க: இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அமர்நாத் புனித யாத்திரை இன்று தொடங்கியது

பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் குறித்து தகவல் பரவியதும் உதய்பூரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது. இந்த படுகொலை செய்த ரியாஸ் அக்தர் மற்றும் முகம்மது கோஸ் ஆகிய இருவரை ராஜஸ்தான் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கை தற்போது தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது.

First published:

Tags: Home Minister Amit shah, NIA, Rajasthan