ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 77 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணை நடத்த உயர்மட்ட குழு அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோடா பகுதியில் இயங்கிவரும் ஜே.கே லோன் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் சமீப வாரங்களாக தொடர்ந்து உயிரிழப்பதாக புகார்கள் வந்துள்ளன. இதனை அடுத்து, இதையடுத்து, மருத்துவமனையில் குழு அமைத்து விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணை குழுவின் ஆய்வு அறிக்கையில், டிசம்பர் மாதத்தில் மட்டும் முதல் 24 நாட்களில் 77 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், சராசரியாக நாள் ஒன்றுக்கு 3 குழந்தைகள் பிறந்த உடன் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
23 மற்றும் 24-ம் தேதிகளில் மட்டும் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளன. ஆக்சிஜன் பற்றாக்குறை, சுத்தமான பராமரிப்பு இல்லாமல் நோய்த்தொற்று காரணமாக பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில், தலைமை மருத்துவர் உடனடியாக மாற்றம் செய்யப்பட்டார். புதிய தலைமை மருத்துவர் மருத்துவமனைக்கு வரும் போது அவருக்கு பூ, சால்வை கொடுத்து வரவேற்றதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் உண்மை நிலவரத்தை கண்டறிய ஜெய்ப்பூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையின் மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு கோடா மருத்துவமனையில் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் சொந்த தொகுதியில் இருக்கும் இந்த மருத்துவமனை, அம்மாநிலத்தின் பெரிய மருத்துவமனைகளில் ஒன்றாக இருக்கிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.