ராஜஸ்தான் மாநிலத்தின் ஹலினா பகுதியில் வசிக்கும் 19 வயது இளம் பெண் ஒருவர் சக கல்லூரி மாணவர்களால் விஷம் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக ஹலினா பகுதி காவல்துறை அளித்த தகவலில், ''இந்த 19 வயது இளம்பெண் தனது பாட்டி வீட்டில் தங்கி கல்லூரியில் படித்து வந்துள்ளார். அருகேயுள்ள பரத்பூர் என்ற பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துவந்த அந்த இளம்பெண்ணை அவருடன் படிக்கும் 5 மாணவர்கள் பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளனர். இவர்களின் வற்புறுத்தலுக்கு மாணவி இணங்க மறுத்துள்ளார்.
இதையடுத்து அந்த மாணவியை அவர்கள் தொடர்ந்து வசைபாடி தொந்தரவு செய்துள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை மூன்று மணி அளவில் அந்த மாணவியை பின்தொடர்ந்த அந்த 5 பேரும் கட்டாயப்படுத்தி ஒரு திரவத்தை குடிக்க வைத்துள்ளனர். வீட்டிற்கு சென்றதும் மாணவி வாந்தி எடுத்து மயக்கமடைந்துள்ளார். இதைத் தொடர்ந்து அவரது வீட்டினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி அப்பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையும் படிங்க - ரூ. 1.50 கோடிக்கு கணக்கு காட்டாத மகனை, உயிருடன் தீயிட்டு கொளுத்திய தந்தை... பரபரப்பு சம்பவம்..
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை விசாரித்துவருகிறது. மேலும், உயிரிழந்த பெண்ணின் உடற்கூறு ஆய்வு மற்றும் தடயவியல் முடிவுகளுக்காகவும் காவல்துறை காத்திருக்கிறது.'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அண்மை காலமாக அதிகம் காணப்படுகிறது. 2020-21 காலகட்டத்தில் மட்டும் ராஜஸ்தான் மாநிலத்தில் 5,310 பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவாகியுள்ளது. இது நாட்டிலேயே அதிகமாகும்.
இதையும் படிங்க - கேரள நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் நடிகை காவ்யா மாதவனுக்கு முக்கிய பங்கு? - செல்போன் உரையாடல் வெளியாகி பரபரப்பு
கடந்த ஒரு ஆண்டில் ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றம் 17.03 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, தேசிய அளவில் பெண்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிராக குற்றங்கள் அதிகம் பதிவாகும் மாநிலமாக ராஜஸ்தான் உள்ளது.
இது தொடர்பாக, 'அனைத்து குற்றங்களுக்கும் முறையாக எப்ஐஆர் பதிய வேண்டும் என முதலமைச்சர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாகவே குற்ற எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதாக' ராஜஸ்தான் காவல்துறை விளக்கமளித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.