ஐரோப்பியா, தென் அமெரிக்கா, தெற்காசியா உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய சந்தைக்கு, 2025 - 2026 காலகட்டத்தில் வந்தே பாரத் ரயில்களை குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் ஏற்றுமதி செய்ய இந்திய ரயில்வே துறை தயாராகி வருகிறது.
இதுகுறித்து ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “உள்நாட்டில் ஸ்லீப்பர் பெட்டி வசதிகளுடன் தயாராகி வரும் பெரும்பாலான வந்தே பாரத் ரயில்கள் 2024ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் இயங்க தொடங்கும். இது மட்டுமல்லாமல் 10 முதல் 12 லட்சம் கிலோ மீட்டர்கள் வரையிலும் பயணிக்கக் கூடிய 75 வந்தே பாரத் ரயில்கள் ஏற்றுமதிக்கு தயாராகி வருகின்றன.
ரயில் பெட்டிகளை ஏற்றுமதி செய்வதற்கான சூழல் அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் உருவாக்கப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் 475 வந்தே பாரத் ரயில்களை உற்பத்தி செய்ய நாங்கள் தயாராகி வருகிறோம். இவை வெற்றிகரமாக இயங்கும்போது, சர்வதேச சந்தையில் நமது பொருள் குறித்த நம்பிக்கை ஏற்பட்டு விடும். வந்தே பாரத் ரயில்கள் அனைத்து சர்வதேச தரங்களையும் நிறைவு செய்யும்’’ என்று தெரிவித்தார்.
இரைச்சல், குலுங்கல் இருக்காது:
வந்தே பாரத் ரயில்கள், சௌகரியமான பயணத்திற்கான 3 ஆம் குறியீட்டளவில் தயாரிக்கப்படுகின்றன. இதனால், ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு அதிர்வு அல்லது குலுங்கல் உணர்வு இருக்காது. மேலும் ஒலி அளவு 65 டெசிபல் அளவில் இருக்கும். இது விமானத்தில் வருகின்ற ஒலியைக் காட்டிலும் 100 சதவீதம் குறைவானதாகும்.
தற்போது உற்பத்தி செய்யப்பட்டுள்ள வந்தே பாரத் ரயில்கள் அகல ரயில் தடத்தில் பயணிக்கக் கூடியவை. இந்நிலையில், உலக நாடுகளில் இருக்கும் வழக்கமான தடங்களில் ரயில்களை இயங்க வைக்கும் வகையில் அவற்றின் உற்பத்தி மாற்றியமைக்கப்படும்.
சோதனைக்கு என்றே புதிய ரயில் தடம் :
ஜோத்பூர் ரயில்வே மண்டலத்தில், ஜெய்ப்பூரில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள குதா - ததானா மித்ரி இடையே 59 கி.மீ. தொலைவுக்கு ரயில்களை பரிசோதனை செய்வதற்கான பிரத்யேக தடம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த தடங்களில் வளைவுகளையும் லாவகமாக கடந்து 220 கி.மீ. வேகத்தில் ரயில்கள் பயணிக்கும். 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த தடம் தயார் செய்யப்படும். இந்தியாவிடம் இருந்து ரயில்களை இறக்குமதி செய்யும் நல்ல வாடிக்கையாளர்களுக்கு (நாடுகள்) இந்த தடத்தில் பரிசோதனை ஓட்டம் நடத்தி ஏற்றுமதி செய்யப்படும்.
2024ஆம் ஆண்டு முதல் காலாண்டில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகள் சென்னையில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளன. நல்ல அகலமான சாலையில் உள்ள வளைவுகளில் கூட மோட்டர் பைக்குகள் லாவகமாக வேகத்துடன் பயணிப்பதைப் போல, தடங்களில் உள்ள வளைவுகளிலும் லாவகமாக பயணிக்கும் 100 வந்தே பாரத் ரயில்கள் 2025 - 26 காலகட்டத்திற்குள் உற்பத்தி செய்யப்படும். 2025ஆம் ஆண்டுக்குள் உற்பத்தி செய்யப்படும் 400 ரயில்களில் இந்த தொழில்நுட்பம் 100 ரயில்களில் இடம்பெற்றிருக்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Business, India, Indian Railways, Vande Bharat