நாடு முழுவதும் ரயில்களில் பயணிக்க 5 வயதினருக்கு மேற்பட்டோரே கட்டணம் செலுத்தி பயணச் சீட்டு எடுக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. 5 வயதிற்கும் குறைவானவர்கள் பயண சீட்டு எடுக்க வேண்டும் என்ற தேவையில்லை என்பதால் ரயில்களில் அவர்களுக்கு தனி இருக்கையோ அல்லது படுக்கையோ வழங்கப்படமாட்டாது.
சிலர் இருக்கை தேவைப்படும் பட்சத்தில் தங்கள் குழந்தைகளுக்கு பெரியவருக்கு உரிய கட்டணத்தை செலுத்தி இருக்கையை முன்பதிவு செய்துகொள்வார்கள். இதுவே தற்போதைய நடைமுறையாக உள்ளது. இந்த நடைமுறை தொடர்பாக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரயில்வே அமைச்சகம் தெளிவான சுற்றறிக்கையும் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், ரயில்வே தனது விதிமுறைகளை மாற்றி, 1 முதல் 4 வயதினரும் டிக்கெட் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த தகவல் உண்மை அல்ல என ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் கூறியதாவது: "ரயிலில் குழந்தைகளுக்கான பயண சீட்டு விதிமுறைகளை இந்திய ரயில்வே மாற்றியமைத்துள்ளதாக அண்மையில் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதன்படி 1 முதல் 4 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பயணச்சீட்டு வாங்க வேண்டும் என்று அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், அந்த தகவல்கள் முற்றிலும் தவறானவை. ரயிலில் குழந்தைகளுக்கான பயண சீட்டு விதிமுறைகளில் இந்திய ரயில்வே எந்த மாற்றமும் செய்யவில்லை.
இதையும் படிங்க: திருப்பதி : அக்டோபர் மாத தரிசனம்.. 300 ரூபாய் டிக்கெட் இன்னும் சற்று நேரத்தில் வெளியீடு
பயணிகள் விரும்பினால், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பயணச்சீட்டு வாங்கி அவர்களுக்கு தனியாக இருக்கை அல்லது படுக்கை வசதியுடன் கூடிய இருக்கையை பெற்றுக்கொள்ளலாம். தனி இருக்கை அல்லது படுக்கை வசதியுடன் கூடிய இருக்கை தேவையில்லை எனில், அந்த குழந்தைகள் கட்டணமில்லாமல் பயணம் செய்துகொள்ளலாம்." இவ்வாறு கூறப்பட்டுள்ளது. எனவே, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கட்டணம் வாங்க வேண்டிய தேவையில்லை என்ற நடைமுறையே தற்போது தொடர்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Indian Railways, IRCTC, Train ticket