ஹோம் /நியூஸ் /இந்தியா /

வேளாண் சட்டத்தை ரத்து செய்யாவிட்டால் ரயில் மறியல்.. டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் அறிவிப்பு..

வேளாண் சட்டத்தை ரத்து செய்யாவிட்டால் ரயில் மறியல்.. டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் அறிவிப்பு..

டெல்லி விவசாயிகள் போராட்டம்

டெல்லி விவசாயிகள் போராட்டம்

ரயில்வே தண்டவாளங்களை முற்றுகையிட்டு ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாகவும், நாடு முழுவதும் உள்ள மக்கள் போராட்டத்தில் இறங்குவார்கள் என்றும் விவசாயிகள் சங்கத் தலைவர் பூட்டா சிங் கூறியுள்ளார். 

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுடன் திறந்த மனதுடன் பேச்சு நடத்த மத்திய அரசு எப்போதுமே தயாராக இருப்பதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விளக்கம் அளித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் பல்வேறு மாநில விவசாயிகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  இந்தப் போராட்டம் 16-வது நாளை எட்டியுள்ள நிலையில், வேளாண் சட்டத்தில் திருத்தங்களை செய்ய உள்ளதாக மத்திய அமைச்சர்கள் அளித்த விளக்கத்தை ஏற்க விவசாயிகள் மறுத்துள்ளனர். 14-ம் தேதி முதல் போராட்டம் தீவிரமடையும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

  இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய அரசின் சட்டத்தால் குறைந்தபட்ச ஆதார விலைக்கோ, மண்டிகளுக்கோ பாதிப்பு இல்லை என்றும், இதனை விவசாயிகளிடம் விளக்க முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

  மேலும் படிக்க... திராவிட இயக்கங்களுக்கு இது கடைசி காலம்: ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணா

  விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவிக்கும் பிரிவுகள் குறித்து திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாகவும் தோமர் கூறினார். குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, பஞ்சாப், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஒப்பந்த விவசாயம் நடைமுறையில் இருப்பதாகவும், இதில், விவசாயிகளின் நிலத்தை தொழிலதிபர்கள் ஆக்கிரமித்துவிட்டதாக குற்றச்சாட்டு எழவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

  விவசாயிகளின் விளைபொருட்கள் குறித்தே ஒப்பந்தம் செய்யப்படுவதாகவும், நிலம் குறித்து ஒப்பந்தம் செய்யப்படுவதில்லை என்றும் மத்திய அமைச்சர் கூறினார். இந்நிலையில், மத்திய அமைச்சரின் விளக்கத்தை ஏற்க விவசாயிகள் மறுத்துள்ளனர். 10-ம் தேதிக்குள் தங்களது கோரிக்கையை ஏற்று, வேளாண் சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என்று பிரதமருக்கு நிபந்தனை விதித்ததாக தெரிவித்தனர்.

  இதனை ஏற்காததால், ரயில்வே தண்டவாளங்களை முற்றுகையிட்டு ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாகவும், நாடு முழுவதும் உள்ள மக்கள் போராட்டத்தில் இறங்குவார்கள் என்றும் விவசாயிகள் சங்கத் தலைவர் பூட்டா சிங் கூறினார். ரயில் மறியல் போராட்டத்துக்கான தேதியை முடிவுசெய்து அறிவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Agricultural act, Delhi, Farmers Protest, Indian Railways