என் குடும்பத்தைப் பாதுகாத்த எஸ்.பி.ஜி சகோதர, சகோதரிகளுக்கு நன்றி! ராகுல் காந்தி உருக்கம்

ராஜீவ் காந்தி குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட எஸ்.பி.ஜி பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது அரசியல்களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

என் குடும்பத்தைப் பாதுகாத்த எஸ்.பி.ஜி சகோதர, சகோதரிகளுக்கு நன்றி! ராகுல் காந்தி உருக்கம்
சோனியா காந்தி, ராகுல் காந்தி
  • News18
  • Last Updated: November 9, 2019, 8:01 AM IST
  • Share this:
என்னையும் என்னுடைய குடும்பத்தினரையும் பாதுகாத்த எஸ்.பி.ஜியைச் சேர்ந்த சகோதர சகோதரிகளுக்கு நன்றிகள் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.ஜி (Special Protection Group) எனப்படும் சிறப்பு பாதுகாப்பு குழுவானது பிரதமரை பாதுகாக்க உருவாக்கப்பட்டது. ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பின்னர் முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை பாதுகாக்கும் பொறுப்பும் எஸ்.பி.ஜி.க்கு வழங்கப்பட்டது. தற்போது பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் குடும்பத்தினரான, சோனியா காந்தி, ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் இந்த பாதுகாப்பில் இருந்துவந்தனர்.

ஏற்கெனவே கடந்த சில தினங்களுக்கு முன்னர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வழங்கப்பட்ட எஸ்.பி.ஜி பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது. இந்தநிலையில், ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பைத் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. எஸ்.பி.ஜி பாதுகாப்புக்கு பதிலாக அவர்களுக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட எஸ்.பி.ஜி பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது அரசியல்களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்தநிலையில், எஸ்.பி.ஜி குழுவில் பாதுகாப்பு அளித்த வீரர்களுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவருடைய ட்விட்டர் பதிவில், ‘இத்தனை வருடங்களாக ஓய்வில்லாமல் உழைத்து என்னையும் என்னுடைய குடும்பத்தினரையும் பாதுகாத்த எஸ்.பி.ஜியைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளுக்கு பெரிய நன்றி. உங்களுடைய அர்பணிப்புக்கும், நிலையான ஆதரவுக்கும் நன்றி. உங்களுடனான பயணம் அன்பு நிறைந்ததாக இருந்தது. உங்களுடைய எதிர்காலத்துக்கு வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


சோனியா காந்தி குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தெரிவித்த கே.சி.வேணுகோபால், ‘பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கண்ணை மூடிக் கொண்டு தனிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையிலும் ஈடுபடுகின்றனர்’ என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

Also see:

First published: November 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்