நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை சம்மனை ஏற்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல் காந்தி இன்று மீண்டும் ஆஜரானார். ராகுல் காந்தியுடன் அவரது சகோதரியும்
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் உடன் வந்தார். கடந்த வாரம் தொடர்ந்து மூன்று நாள்கள் அமலாக்கத்துறை முன் ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜரானார்.
மூன்று நாள்களில் சுமார் 30 மணிநேரம் ராகுல் காந்தியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தனது தாயார் சோனியா காந்தியின் உடல் நலனை காரணம் காட்டி விசராணையை சில நாள்கள் தள்ளி வைக்க கோரி அமலாக்கத்துறையிடம் கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை அமலக்கத்துறை ஏற்றுள்ள நிலையில், தற்போது நான்காவது முறையாக அமலக்கத்துறை முன் ஆஜராகியுள்ளார்.
இந்நிலையில், ராகுல் மீது அரசியல் காழ்புணர்வு காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் கூறி காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ராகுலுக்கு ஆதரவாகவும் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சியினர் டெல்லி கட்சி தலைமை அலுவலகம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் சத்தியாகிரக அமைதி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது கோவிட் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அமலாக்கத்துறை வழக்கின் பின்னணி
அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தை (ஏஜெஎல்) நாட்டின் சுதந்திரத்துக்கு முன்னரே ஜவஹர்லால் நேரு தொடங்கினார். இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்தனர். இதன் சார்பில் நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட சில பத்திரிகைகள் வெளியாயின. இந்நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி 90 கோடி ரூபாய் கடன் கொடுத்துள்ளது. இதை திருப்பிச் செலுத்தாத நிலையில், நஷ்டம் காரணமாக 2008-ல் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுத்தப்பட்டது. இதையடுத்து, 2010-ம் ஆண்டு இந்நிறுவனத்தின் பங்குகள் வெறும் ரூ.50 லட்சத்துக்கு யங்இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. இதற்கு ஏஜேஎல் நிறுவன பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெறவில்லை.
இதையும் படிங்க:
அக்னிபத் குறித்த வதந்திகளை பரப்பியதால் 35 வாட்ஸ்அப் குழுக்களுக்குத் தடை!
இந்நிறுவனத்தின் 76 சதவீத பங்குகள் காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் ஆகியோர் வசமும் 24 சதவீத பங்குகள் மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் வசமும் வந்தன. 2016 முதல் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மீண்டும் வெளியாகிறது. இதனிடையே, 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஏஜேஎல் நிறுவனத்தின் பங்குகளை மாற்றியதில் முறைகேடு நடந்ததாகக் கூறி அமலாக்கப் பிரிவு சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.