அழிவு சக்தி ‘டூம்ஸ்டே மேன்’ கதாபாத்திரத்துடன் ராகுல் காந்தியை ஒப்பிட்ட நிர்மலா சீதாராமன்

அழிவு சக்தி ‘டூம்ஸ்டே மேன்’ கதாபாத்திரத்துடன் ராகுல் காந்தியை ஒப்பிட்ட நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

விவசாயிகளுக்கு எதிராக, வேளாண் சட்டத்தில் எந்த அம்சங்கள் உள்ளன என்பது குறித்து, ராகுல் ஏதும் பேசவில்லை. வேளாண் சட்டங்கள் பற்றி, பிரதமர் அளித்த விளக்கத்துக்கு பதில் அளிக்கும் வகையிலும், ராகுல் பேசவில்லை.

 • Share this:
  மக்களவையில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவின் ‘டூம்ஸ்டே மேன்’ ஆகி விட்டார் ராகுல் காந்தி என்று கடுமையாக விமர்சித்தார்.

  அமெரிக்காவில், 'மார்வெல் காமிக்ஸ்' வெளியிட்ட புத்தகங்களில் வரும் கற்பனை கதாபாத்திரம் தான், டூம்ஸ்டே மேன். இந்த கதாபாத்திரத்தை உருவாக்கியவர், எழுத்தாளர் ஸ்டான் லீ. வடிவம் கொடுத்தவர் ஓவியர் ஜான் புசீமா. இந்த கதாபாத்திரம், முதலில், 'சில்வர் சபர்' என்ற நாவலில் தான் இடம் பெற்றது.

  மிகக் கொடூர வில்லனாக, 'டூம்ஸ்டே மேன்' கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டது. அதன் பின், பல நாவல்கள், திரைப்படங்கள், நாடகங்களில், இந்த கதாபாத்திரம் இடம் பெற்றது. அழிவு சக்திக்கான அடையாளமாக, டூம்ஸ்டே மேன் கதாபாத்திரம், அமெரிக்கர்களால் கருதப்படுகிறது.

  இந்தக் கதாபாத்திரத்துடன் ராகுல் காந்தியை நிர்மலா சீதாரமன் ஒப்பிட்டுப் பேசியது சர்ச்சையாகி உள்ளது.

  2021 - 22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம், மக்களவையில் நடந்தது. விவாதத்துக்கு பதில் அளித்து, நிதியமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன் பேசும் போது, “பட்ஜெட் மீதான விவாதத்தில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசும் போது, 10 முக்கிய விஷயங்களை எதிர்பார்த்தேன்; ஆனால் அவர், நாட்டை இழிவுபடுத்தும் விதமாகவே பேசி வருகிறார். போலியான கட்டுக்கதைகளை உருவாக்கும் ராகுலுக்கு, அவர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு அளிக்கும் பதிலைக் கேட்கும் பொறுமையும் இல்லை.

  அரசியலமைப்புகளில் உயர்ந்த தலைமை வகிப்போர் பற்றி அவதுாறாகவும், பல்வேறு விஷயங்களில் போலியான கட்டுக்கதைகளையும் கூறி, தேசத்தின் வளர்ச்சி பற்றியும், எதிர்மறையாகவே, ராகுல் தொடர்ந்து பேசி வருகிறார்.அழிவு காலத்தைப் பற்றியே, எப்போதும் சிந்திக்கும் ராகுல், நாட்டின் வில்லனாகவே மாறிவிட்டதாக தெரிகிறது. அவநம்பிக்கை மனிதராக, ராகுல் இருப்பாரோ என்ற அச்சம் உள்ளது.

  கெட்ட காலத்தைப் பற்றிச் சிந்திக்கும் மனிதர் தலைமையில் தான், எதிர்க்கட்சிகளும் நடக்கின்றன. கொரோனா காலத்தில்,ராகுல் என்ன பேசினார் என்பது, எனக்கு நினைவிருக்கிறது. அதனால், அவர் பேசியதை மீண்டும் கூறி, சபையின் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. பட்ஜெட் விவாதத்தில் பேசிய ராகுல், பட்ஜெட்டைப் பற்றி எதுவுமே பேசவில்லை. வேளாண் சட்டங்கள் பற்றி பேசினார்.

  ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களின் சட்டசபை தேர்தலின் போது, விவசாயிகள் கடன் தள்ளுபடி குறித்து, தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கூறி இருந்தது. ஆனால் அதுகுறித்து, தன் பேச்சில், ராகுல் எதுவும் கூறவில்லை. காங்கிரஸ் ஆட்சி நடக்கும் பஞ்சாப் மாநிலத்தில், விவசாயிகள் பிரச்னை பற்றி ராகுல் பேசவில்லை. வயல்களில், வேளாண் கழிவுகள் எரிக்கப்படுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிப் பேசவில்லை.

  விவசாயிகளுக்கு எதிராக, வேளாண் சட்டத்தில் எந்த அம்சங்கள் உள்ளன என்பது குறித்து, ராகுல் ஏதும் பேசவில்லை. வேளாண் சட்டங்கள் பற்றி, பிரதமர் அளித்த விளக்கத்துக்கு பதில் அளிக்கும் வகையிலும், ராகுல் பேசவில்லை. இழிவுகாங்கிரசின் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த நேரத்தில், அவசர சட்ட நகலை கிழித்து எறிந்தவர் தான் ராகுல். நாட்டை பிளவு படுத்தும் குழுக்களுடன், காங்கிரஸ் கட்சி இணைந்து, பொய்யான கருத்துக்களையும், போலியான கட்டுக்கதைகளையும் கூறி, நாட்டை இழிவு படுத்துகிறது.

  இவ்வாறு, அவர் பேசினார்.
  Published by:Muthukumar
  First published: