குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர
மோடி ஜப்பான் நாட்டை சென்றடைந்தார். முன்னதாக, இந்தோ - பசிபிக் பிராந்திய வளர்ச்சிக்கு குவாட் மாநாடு உதவும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் தலைநகர் டோக்யோவுக்கு சென்றடைந்தார். இந்தியாவின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக ஜப்பான் நிறுவனங்களை சேர்ந்த 30 தலைமை செயல் அதிகாரிகள் மற்றும் இந்திய வம்சாவளியினரை சந்தித்து பேசுகிறார். இதையடுத்து நாளை நடைபெறும் குவாட் மாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.
இம்மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். இதில், இந்தோ - பசிபிக் பிராந்திய வளர்ச்சி, உணவு பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி தனியாக ஆலோசனை நடத்துகிறார்.
இதில் உக்ரைன் விவகாரம் உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து இருவரும் கலந்துரையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பான் பயணத்துக்கு முன்னதாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தோ - பசிபிக் பிராந்தியந்தில் வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கு ஆபத்து உள்ளதாகவும், அதுபற்றி குவாட் மாநாட்டில் தீவிரமாக ஆலோசிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ் எழுத்துக்கள் மூலம் ஓவியம்.. வியந்து பாராட்டிய ஆனந்த் மகேந்திரா
ஜப்பான் சென்றடைந்த மோடிக்கு அங்குள்ள இந்திய வம்சாவளியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷன் ஆலோசகர் ஒசாமு சுஸுகி, NEC கார்ப்பரேஷனின் தலைவர் திரு. நோபுஹிரோ எண்டோ உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்களை மோடி சந்தித்து பேசினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.