’திருமணம் முக்கியமல்ல விவசாயம்தான்’.. வெளிநாட்டிலிருந்து திரும்பியவுடன் விவசாயிகள் போராட்டத்தில் பங்கெடுக்கும் பஞ்சாபி இளைஞர்

’திருமணம் முக்கியமல்ல விவசாயம்தான்’.. வெளிநாட்டிலிருந்து திரும்பியவுடன் விவசாயிகள் போராட்டத்தில் பங்கெடுக்கும் பஞ்சாபி இளைஞர்

கோப்புப்படம்.

அபுதாபியில் இருந்து தனது திருமணத்திற்காக விடுமுறையில் வந்த பஞ்சாபி இளைஞர், தனது ஊர் விவசாயிகளுக்காக டெல்லி போராட்டத்தில் பங்கேற்ற நிகழ்வு பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

  • Share this:
ஐக்கிய அரபு எமிரேட்சில் பணிபுரிந்து வந்த சத்னம் சிங் என்ற இளைஞருக்கு தற்போது வயது 29 ஆகிறது. இவர் அடிப்படையில் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். அபுதாபியில் சுமார் இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்த பின்னர், நிறுவனம் அவருக்கு 2 மாதங்கள் விடுமுறை அளித்திருந்தது.

இந்த 2 மாதங்களில் அவருக்கு ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்துவிட வேண்டும் என்று அவர்களின் பெற்றோர் நினைத்துக் கொண்டிருந்தனர். அந்த திட்டத்துடன் அவர் ஊருக்குத் திரும்பியுள்ளார். ஆனால், சத்னம் தனது சொந்த ஊரான பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள தனது கிராமத்தை அடைந்தபோது, திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது.

அபுதாபியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பிளம்பராக வேலை பார்த்து வரும் சத்னம் சிங், கடந்த நவம்பர் மாதம் 29ம் தேதி தனது கிராமத்திற்கு வந்தடைந்தார். அப்போதுதான் தனது மூத்த சகோதரரும், கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளும் சிங்கு எல்லையில் சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்தது.

Also read: விவசாயிகளுக்கு மத்திய அரசு செய்வது பாவ காரியம்: பிரியங்கா காந்தி வேதனை

இதுகுறித்து பி.டி.ஐ. பத்திரிகை வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, சத்னம் சிங் தனது பெற்றோருடன் 2 நாட்கள் மட்டுமே செலவழித்துள்ளார். பின்னர் ஒரு புதிய மோட்டார் சைக்கிளை வாங்கி டெல்லி - ஹரியானா எல்லைக்கு தனது நண்பருடன் புறப்பட்டுச் சென்று போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார் என தெரிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்து அந்த இளைஞர் தெரிவித்ததாவது, "திருமணத்திற்குக் காத்திருக்க முடியும். வேலைக்குக் காத்திருக்க முடியும். ஆனால் விவசாயம் காத்திருக்காது" என்று கூறினார். தனது விடுமுறை காலத்தில் தனக்கு திருமணம் நடத்த வேண்டும் என்று பெற்றோர் விரும்பியதாக தெரிவித்தார். ஆனால் இப்போது அவருக்கு திட்டம் மாறியிருப்பது அவரது பேச்சில் வெளிப்பட்டுள்ளது.

சத்னம் சிங் மேலும் கூறியது, "எனது திருமணத்திற்காக சில வரன்களைப் பார்க்க வேண்டும் என்று எனது பெற்றோர்கள் விரும்புகின்றனர். அம்மாவுக்கு 70 வயதாகிறது. அவரால் வீட்டை நிர்வகிப்பது கடினமாக உள்ளது. மேலும், கண் பார்வை குறைபாடும் எனது தாய்க்கு உள்ளது. அதேபோல, தந்தையாலும் வயல்களைக் கவனித்துக்கொள்ள முடியாது" என்று கூறினார்.

2 மாத விடுப்பில் வந்த நீங்கள் மீண்டும் அபுதாபிக்கு எப்போது திரும்புவீர்கள் என்று அவரிடம் கேட்ட போது, "இந்தப் போராட்டத்தை வெல்லும்வரை இங்கு தங்கியிருப்பது உறுதி. அபுதாபியில் வேலை கிடைப்பதற்கு முன்பு நான் ஒரு விவசாயியாக இருந்தேன். முதலில் எனது வயல்களைக் காப்பாற்ற வேண்டும். மற்றவையெல்லாம் பிறகுதான்" என தெரிவித்துள்ளார்.

சத்னம் சிங்குடன் வந்த அவரது நண்பர் சூகா சிங் ஒரு மாற்றுத்திறனாளி விவசாயி ஆவார். இவர் சத்னம் குறித்து பேசுகையில், வெறும் 2 நாட்களே தனது பெற்றோருடன் நேரத்தைச் செலவிட்ட சத்னம், தற்போது அவர்களைத் தனியாக விட்டுவிட்டு போராட்டத்தில் ஈடுபடுகிறார். ஆனால் சத்னத்தை அவரது பெற்றோர் ஒரு முறைகூட தடுக்கவில்லை என்று கூறியிருந்தார். என்னதான் கடல் கடந்து வேலை பார்த்தாலும் ஒரு விவசாயியின் உள்ளம் எப்பொழுதும் தனது சொந்த ஊரின் விவசாயிகளைப் பற்றியே நித்தமும் நினைத்துக் கொண்டிருந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published: